கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்கும் என நெடுங்காலமாக கூறிவருகின்றனர். மனிதர்களின் நிறத்தால் எந்த பயனும் இல்லை என்றாலும், இத்தகைய நம்பிக்கை இன்றளவும் நிலவி வருகிறது. இந்நிலையில், குங்குமப்பூவில் இருக்கும் நன்மைகள் குறித்தும், இதனால் நிறத்திற்கு தொடர்பு இருக்கிறதா என்றும் மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அறிவியல் ரீதியாக குங்குமப்பூவில் சில அன்டி ஆக்சிடென்ட்ஸ் இருப்பதாக மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சஃப்ரனால், க்ரோசின் ஆகியவை குங்குமப்பூவில் இருக்கின்றன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை அளித்தாலும், குழந்தைகளின் நிறத்திற்கும், இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என அருண் குமார் கூறுகிறார்.
நிறம் என்பது மரபணு சார்ந்தது. பெற்றோரின் மரபணு மட்டுமே குழந்தைகளின் நிறத்தை நிர்ணயிப்பதாக மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். கேரட், குங்குமப்பூ, மாதுளை என எந்த உணவு பொருட்களிலும் நிறத்தை நிர்ணயிக்கக் கூடிய தன்மை இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உடல் எடை குறைப்பு, மாதவிடாய் வலியை குறைத்தல், இருதய நோய் ஆபத்துகளை குறைத்தல் போன்ற தன்மைகள் குங்குமப்பூவிற்கு இருந்தாலும், இதனால் நிறத்தை மாற்ற முடியாது எனத் தெரிந்து கொள்ள முடிகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.