scorecardresearch

மாதம் 2-3 கிலோ உடல் எடை குறைய தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங்; ஃபிட்னெஸ் டிரெயினர் டிப்ஸ்

ஒரு நாளைக்கு அவர்களின் உடற்தகுதி அளவைப் பொறுத்து குறைந்தது 6 ஆயிரம்-10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.

Walking benefits
Walking benefits

பலவிதமான உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சிகளை முயற்சித்தாலும், நம்மில் பலர் உடல் எடையை குறைக்க போராடுகிறோம். ஆனால், எந்தவொரு உடற்பயிற்சி இலக்கையும் அணுகுவதற்கான சிறந்த வழி ஒருவரின் உடற்பயிற்சிகளுடன் ஒத்துப்போவதும், தேவையான உணவுமுறை மாற்றங்களையும் செய்வதே என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

ஃபிட்னெஸ் டிரெயினர் சிம்ரன் வலேச்சா ஒரு நாளைக்கு ஒரு மணிநேர நடைப்பயிற்சி கூட கலோரி பற்றாக்குறைக்கு உதவும் என்பதைப் பகிர்ந்து கொண்டார் –இங்கு உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையை விட செலவழிக்கப்பட்ட கலோரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

“பெண்களே, ஒவ்வொரு மாதமும் 2-3 கிலோ எடையைக் குறைப்பது கடினம் அல்ல, உடல் எடையைக் குறைக்க கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று யாரேனும் சொல்வதைக் கேட்பதை நிறுத்துங்கள். நீங்கள் எல்லாவற்றையும் சாப்பிடலாம் மற்றும் தினசரி 200-300 கலோரிகளின் ’கலோரி பற்றாக்குறை’ உருவாக்கலாம். உங்கள் உடலை தினமும் நகர்த்துவது,  உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ உதவும், ”என்று அவர் கூறினார்.

எனவே கலோரி பற்றாக்குறை மற்றும் நடைபயிற்சி எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி மேலும் அறிய நிபுணர்களை அணுகினோம்.

கலோரிக் பற்றாக்குறை (Caloric deficit) என்பது உங்கள் பராமரிப்பு கலோரிகளை விட குறைவாக சாப்பிடுவதைக் குறிக்கிறது. அதாவது, உணவு உட்கொள்ளலைக் குறைத்து, கலோரிகளின் எண்ணிக்கையை குறைப்பது. “இருப்பினும், அவர்கள் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் (BMR) அளவை விட அதிகமாக சாப்பிடுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தசை இழப்பைத் தடுக்க போதுமான புரத உட்கொள்ளலை வைத்திருங்கள்,” என்று ஃபிட்பாத்ஷாலாவின் இணை நிறுவனர் ரச்சித் துவா கூறினார்.

நடை பயிற்சி எவ்வாறு உதவுகிறது?

நடை பயிற்சி மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட உடற்பயிற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால், எளிய நடை பயிற்சி பொது ஆரோக்கிய நிலைகளை மேம்படுத்துவதில் பெரும் பங்களிப்பை அளிக்கும். “ஒரு மணிநேர நடை என்பது நடையின் வேகத்தைப் பொறுத்து 5,500- 6,500 அடிகளுக்குச் சமம். உடல் கொழுப்பை எரித்தல், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், மன அழுத்தத்தை குறைத்தல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பொது ஆரோக்கியத்தை மேம்படுத்த இது எளிதான மற்றும் மிகவும் செலவு குறைந்த வழியாகும்” என்று துவா கூறினார்.

மனித உடல் அசைவதற்காக இருப்பதால், ஒரு நாளைக்கு அவர்களின் உடற்தகுதி அளவைப் பொறுத்து குறைந்தது 6 ஆயிரம்-10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். ஸ்டெப் டிராக்கர் பேண்ட்ஸ்/வாட்ச்களைப் பயன்படுத்துவது உங்கள் அடிகளைக் கண்காணிக்க உதவும், என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

நடை பயிற்சி எடை இழப்புக்கு மட்டும் அவசியம் அல்ல, கெட்ட கொழுப்பு குறைக்க (LDL-C), நல்ல கொழுப்பு (HDL-C) அதிகரிக்க, உயர்ந்த மனநிலை மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பிற நன்மைகளையும் கொண்டுள்ளது.

உணவியல் நிபுணர் கரிமா கோயல் கூறுகையில், நடைபயிற்சி இதய நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்க்குறி அல்லது டைப் 2 நீரிழிவு போன்ற பல்வேறு நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது, இதனால் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

உடலின் தசைகளை வலுப்படுத்த நடை பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். நடைப்பயணத்துடன், நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் கைகளை அசைக்கும் போது, நடைபயிற்சி உடலின் அனைத்து தசைகளையும் உள்ளடக்கி வேலை செய்யும், என்று கோயல் பகிர்ந்து கொண்டார்.

எதை மனதில் கொள்ள வேண்டும்?

*நீங்கள் எரிப்பதை விட குறைவான கலோரிகளை சாப்பிடுங்கள்.

*இதை அடைய, உடற்பயிற்சியின் மூலம் அதிக கலோரிகளை எரிக்கவும் அல்லது உங்கள் உணவில் உட்கொள்ளும் கலோரிகளை குறைக்கவும் அல்லது இரண்டையும் செய்யவும்.

எடை இழப்பை இலக்காகக் கொண்ட பெரும்பாலானவர்களுக்கு, வாரத்திற்கு 0.45 கிலோவைக் குறைக்க 500 கலோரிகளின், கலோரி பற்றாக்குறை போதுமானது. எனவே, நடைபயிற்சி என்பது ஒரு சிறந்த உடற் பயிற்சியாகும், இது உடல் எடையை குறைக்க உதவுவதுடன் மற்ற ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது, என்று கோயல் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Health walking benefits best weight loss tips