Healthy food Tamil News: பெருபாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாக இட்லி அல்லது தோசை தயார் செய்யப்படுகிறது. சில வீடுகளில் இட்லி தயார் செய்வதற்கான மாவு தயார் நிலையில் இருக்கும். ஆனால் இன்னும் சில வீடுகளில் கடைக்குச் சென்று தான் வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.
தற்போது கொரோனா தொற்றின் பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இட்லி மாவு கடைகளை தேடி அலைய வேண்டிய நிலை வந்துள்ளது. மேலும் வீட்டிலே மாவு தயார் செய்யும் மக்கள் சில நேரங்களில் மறதி காரணமாக தயார் செய்ய இயலாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இது போன்ற தர்ம சங்கடமான நிகழ்வுகளில் இருந்து தவிர்க்கவும், 10 நிமிடத்தில் சத்தான மற்றும் சுவையான இட்லி, தோசை தயார் செய்வதற்கும் ராகி அல்லது கேப்பை மாவை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்துள்ளோம். அதோடு இந்த ஊட்டச்சத்து மிக்க உணவை தயார் செய்யும் எளிய செய்முறையும் இங்கு வழங்கியுள்ளோம்.
தேவையான பொருட்கள்
ராகி மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
ரவை – 1/2 கப்
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 துண்டுகள்
சிறிய துண்டு இஞ்சி – துருவியது
தேங்காய்த்துருவல் – 2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைஉப்பு- தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு அகலமான ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதில் 1 கப் ராகி மாவு, 1/2 கப் அரிசி மாவு, 1/2 கப் ரவை , 1 டேபிள்ஸ்பூன் தயிர் இவைகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதன்பின்பு 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, தேங்காய்த்துருவல், – 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை போன்றவற்றோடு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். மேலும் அவற்றை நன்றாக கரைத்து 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். மாவை கறக்கும்போது தண்ணீராக கரைத்து வைத்துக் கொள்ளவும், கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
மாவு நன்றாக ஊறிய பின்னர், தோசைக் கல்லை அடுப்பில் வைத்துக் கொள்ளவேண்டும். கல் சூடானதும் இந்த மாவை ரவா தோசை ஊற்றுவது போல் கல் முழுவதும் ஊற்ற வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். நன்றாக இரு புறமும் வேக வைத்த தோசையை, சுவையான கொத்தமல்லி சட்டினியுடன் சேர்த்து சுவைக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)