கிராமப்புறங்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையா? ``கோழி அடிச்சு கொழம்புவெச்சு சாப்பிடு. எல்லாம் சரியாப் போகும்’’ என்பது வயது முதிர்ந்தவர்களின் கூற்றாக இருக்கிறது.'அசைவம் சாப்பிடுபவர்கள் கோபக்காரர்கள்' என்ற வேடிக்கையான கருத்து ஒன்று நம்மைச் சுற்றி வந்துகொண்டே இருக்கிறது. அது சைவமோ, அசைவமோ... எந்த உணவாக இருந்தாலும், அது அளவாக இருந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. இதுதான் மருத்துவர்கள் தரும் கூற்று.
அசைவ உணவு, சைவ உணவு என்று எதுவாக இருந்தாலும், அதிக அளவு மசாலா கலந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்களே கோப சுபாவத்துக்குக் காரணம்.
அசைவ உணவை சாப்பிடும் போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை:
1. இறைச்சியை ஃப்ரெஷ்ஷாகப் பார்த்து வாங்க வேண்டும். வாங்கிவுடன் மஞ்சள் தடவிவைத்திருந்து, சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டுச் சமைக்க வேண்டும்.
2. அசைவ உணவுக்குப் பின்னர் கொள்ளு ரசம், பெருஞ்சீரகத் தண்ணீர், பால் சேர்க்காத சுக்குமல்லிக் காபி, இஞ்சித் துவையல் போன்றவற்றைச் சாப்பிடலாம். இவை சீரான செரிமானத்துக்கு உதவும். மேலும், கொழுப்பு உடலில் சேர்வதைத் தடுக்கும்.
3. வாரம் ஒரு முறை மட்டன் அல்லது கோழி இறைச்சி, வாரம் இரு முறை மீன் எனச் சாப்பிடலாம். பிராய்லர் கோழிகளைத் தவிர்ப்பது நல்லது.
4. இறைச்சியை நல்ல எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயில் சமைத்துச் சாப்பிடலாம். இவை அவற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.
5. இறைச்சியுடன் வெங்காயம் சேர்த்து உண்ணலாம். இது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
6. அசைவ உணவில் கட்டாயம் இஞ்சி, பூண்டு, கிராம்பு, மிளகு, ஏலக்காய், பட்டை போன்றவற்றை சேர்த்துச் சமைக்க வேண்டும்.
7. அசைவ உணவு சாப்பிட்டு, 30 நிமிடங்கள் இடைவெளிக்குப் பின்னர் பழச்சாறு, இளஞ்சூடான நீர் போன்றவற்றைக் குடிக்கலாம். இவை செரிமான சக்தியை அதிகரிக்கும்..