Healthy Soup Tamil News, Murungai Keerai Soup Tamil Video: முருங்கைக் கீரை சூப் மகத்துவம் பலருக்கு தெரிவதில்லை. இரும்புச் சத்து மிகுந்த பானம் இது. இந்த பேண்டமிக் காலகட்டத்தில் இதை நோய் எதிர்ப்பு சக்திக்காக தினமும் பயன்படுத்தலாம். சாதாரண ஜலதோஷம், இருமல் ஆகியவற்றுக்கும் இது ஆகச் சிறந்த மருந்து.
நம் வீட்டு அருகிலேயே இலவசமாக கிடைக்கும் உணவுப் பொருள் இது. அல்லது, பக்கத்து மார்க்கெட்டில் மலிவான விலையில் கிடைக்கும். அதனாலேயே இதை ‘சீப்’பாக நினைத்துவிட வேண்டாம். பொதுவாக எண்ணெய் ஊற்றி தாளித்து, முருங்கைக் கீரை செய்முறை ஒன்று உண்டு. அப்படி இல்லாமல், மிகச் சிம்பிளாக செய்யும் முறையை இங்கு காணலாம்.
Murungai Keerai Soup Tamil Video: முருங்கைக் கீரை சூப்
முருங்கைக் கீரை சூப் செய்யத் தேவையான பொருட்கள்: ஒரு கைப்பிடி அளவுக்கு முருங்கைக் கீரை, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், சின்ன வெங்காயம்- 5, உப்பு- தேவையான அளவு. இந்த ஐந்தே பொருட்களுடன் இரண்டு கிளாஸ் தண்ணீரும் மட்டுமே தேவை.
முருங்கை இலையை அதன் கிளைக் காம்புகளில் இருந்து ஆய்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு இலை எடுத்துக் கொண்டு, நீர் விட்டு நன்கு கழுவுங்கள். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு, உள்ளே முருங்கைக் கீரையைப் போட்டு கொதிக்க வையுங்கள்.
கொதிக்க ஆரம்பித்ததும், நறுக்கிய சின்ன வெங்காயத் துண்டுகள், ஒரு ஸ்பூன் மிளகுத் தூள், ஒரு ஸ்பூன் சீரகத் தூள் ஆகியவற்றை சேருங்கள். தேவைக்கு உப்பு இடவும். நன்கு கொதித்ததும், தீயைக் குறைத்து சுமார் 20 நிமிடம் காய்ச்சுங்கள். 2 டம்ளராக விட்ட தண்ணீர் சுமார் ஒன்றரை டம்ளர் தண்ணீர் அளவுக்கு வற்றட்டும்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு அரிப்பு மூலமாக முருங்கை இலை சூப்பை அரித்து தனியாக பிரித்து எடுங்கள். இப்போது சுவையான, உடலுக்கு மிகவும் தேவையான சத்துகள் அடங்கிய முருங்கைக் கீரை சூப் ரெடி!
சற்று சூடாகவே இதை அருந்துவது நல்லது. கொஞ்சம் காரசாரமாக விரும்புகிறவர்கள் கூடுதலாக அரை ஸ்பூன் மிளகுத் தூள், நான்கைந்து பல் வெள்ளைப் பூண்டு, சிறு துண்டு இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.