நாம் அன்றாடம் மேற்கொள்ளும் சமையல் வேலைகளை எளிமையாக மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து இணையத்தில் தேடி இருப்போம். அதன்படி, சில டிப்ஸ்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
முதலில், பானையில் வடித்த சாதத்தை ஹாட் பாக்ஸ் இல்லாமல் நீண்ட நேரத்திற்கு சூடாக வைத்திருப்பது எப்படி எனப் பார்க்கலாம். சாதம் வடிக்கும் போது எடுத்த கஞ்சியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அந்த பாத்திரத்தின் மேல் சாதம் இருக்கும் பானையை வைத்து விடலாம். இப்படி செய்வதன் மூலம் நீண்ட நேரத்திற்கு சாதம் சூடாக இருக்கும்.
பல நேரங்களில் பால் பொங்கி வரும் போது சரியாக அடுப்பை ஆஃப் செய்யாவிட்டால், பால் வீணாகி விடும். இதை தடுப்பதற்கு ஒரு மரக்கரண்டி இருந்தாலே போதும். அடுப்பில் பால் காய்க்க வைத்திருக்கும் பாத்திரத்தின் மீது ஒரு சுத்தமான மரக்கரண்டியை வைத்து விடலாம். இப்படி வைத்தால் பால் பொங்கி கீழே விழாது.
எத்தனை கட்டு கீரை வாங்கினாலும், அவற்றை சில நிமிடங்களில் தனியாக பிரித்து எடுப்பது எப்படி என இதில் பார்ப்போம். முதலில் கீரைக்கட்டை பிரித்து வைத்து அதன் கீழ்ப்பகுதியை நன்றாக தட்டிவிட வேண்டும். இப்போது, ஒரு பழைய பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை எடுத்து அதன் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதியை தனியாக வெட்டி எடுக்க வேண்டும். இனி, கீரைக்கட்டை அந்த வாட்டர் பாட்டிலின் உள்ளே நுழைத்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியே தள்ளி வெட்டலாம். இப்படி செய்வதன் மூலம் சில நிமிடங்களில் கீரைகளை உருவி எடுத்து பயன்படுத்தலாம், நமது நேரமும் மிச்சமாகும்.
இதேபோல், மற்ற காய்கறிகளையும் சுலபமாக சில நிமிடங்களில் வெட்டி எடுக்கலாம். உதாரணத்திற்கு, சுமார் 6 அல்லது 7 வெண்டைக்காய்களை எடுத்து அதன் மேற்பகுதியில் ரப்பர் பேண்ட் போட வேண்டும். இப்போது, கைகளால் வெண்டைக்காய்களை அழுத்தி பிடித்திருப்பதை தோன்றும். இனி, இவற்றை வெட்டினால் சுலபமாக இருக்கும்.