காலை உணவுடன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்துக்கொள்வது பலருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், பழச்சாறுகளின் ஊட்டச்சத்து மதிப்பு குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, குடல் ஆரோக்கியம் பற்றிய விவாதம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், காலையில் ஆரஞ்சு ஜூஸுடன் நாளைத் தொடங்குவது எவ்வளவு பாதுகாப்பானது என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
நவி மும்பையின் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் இரைப்பைக் குடலியல், ஹெபடாலஜி ஆலோசகர் டாக்டர் சோனாலி கௌதம் கருத்துப்படி, ஒவ்வொரு நாள் காலையும் ஆரஞ்சுஜூஸ் குடிப்பது உங்கள் செரிமான அமைப்புக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும். இதன் தாக்கம் நீங்கள் அதை எப்படி உட்கொள்கிறீர்கள் மற்றும் உங்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட உடல்நலப் பிரச்னைகள் உள்ளதா என்பதைப் பொறுத்தது.
ஆரஞ்சு ஜூஸின் நன்மைகள்:
"ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஃபிளவனாய்டு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவுகின்றன, வீக்கத்தைக் குறைக்கின்றன, மேலும் உங்கள் செரிமான மண்டலத்தில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை ஆதரிப்பதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்" என்று டாக்டர் கௌதம் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், "நீங்கள் ஜூஸுடன் ஓட்ஸ் அல்லது முழு தானிய டோஸ்ட் போன்ற நார்ச்சத்து நிறைந்த காலை உணவைச் சேர்த்தால், அது இரும்பைப் போன்ற ஊட்டச்சத்துகளை உங்கள் உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது நாளுக்கு ஒரு சீரான தொடக்கத்தை அளிக்கிறது."
ஆரஞ்சு ஜூஸின் பாதகங்கள்:
"100% சுத்தமான ஜூஸில் கூட கணிசமான அளவு சர்க்கரை உள்ளது: சாதாரண கிளாஸில் சுமார் 20 முதல் 25 கிராம். ஜூஸ் பிழியும் போது நார்ச்சத்து நீக்கப்படுவதால், அந்த சர்க்கரை உடனடியாக உங்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து, ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்கிறது. காலப்போக்கில், இது இன்சுலினுக்கு உங்கள் உடல் செயல்படும் திறனை மந்தப்படுத்தலாம். நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் அல்லது அதற்கு ஆபத்தில் உள்ளவர்கள் இதைக் கவனிக்க வேண்டும்" என்று டாக்டர் கௌதம் விளக்கினார்.
சர்க்கரை மற்றும் அமிலத்தின் கலவை பற்களுக்கு உகந்தது அல்ல. "இது எனாமலை அரிக்கலாம், எனவே ஜூஸ் குடித்த பிறகு தண்ணீரில் வாயைக் கொப்பளிப்பது அல்லது ஸ்ட்ரா மூலம் ஜூஸ் குடிப்பது பற்களுடன் அதன் தொடர்பைக் குறைக்க உதவும்" என்று அவர் கூறினார். ஜூஸ் பிழியும் போது நார்ச்சத்து இழக்கப்படுகிறது என்பதுதான் முக்கிய குறைபாடு என்று டாக்டர் கௌதம் எடுத்துரைத்தார். முழு ஆரஞ்சு பழத்தில் உள்ள நார்ச்சத்து குடலின் இயக்கத்திற்கு உதவுகிறது மற்றும் அங்கு வாழும் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கிறது.
ஆரஞ்சு ஜூஸை ஆரோக்கியமான வழியில் குடிக்க சில குறிப்புகள்:
குறைந்த அளவு, ஒரு சிறிய கிளாஸ் (சுமார் 150 மில்லி) அளவுக்கு மேல் ஊற்ற வேண்டாம். சர்க்கரை சேர்க்க வேண்டாம், புதிதாகப் பிழியப்பட்ட அல்லது கோல்ட்-பிரஸ் செய்யப்பட்ட ஜூஸைத் தேர்ந்தெடுங்கள், ஒருபோதும் சர்க்கரை சேர்க்க வேண்டாம். அமிலத்தன்மை ஒரு கவலையாக இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதைத் தவிர்க்கவும். உணவுடன் அருந்தவும், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுடன் அருந்துங்கள். நார்ச்சத்து, சர்க்கரை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முழு ஆரஞ்சு பழங்களை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.