ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் உடற்பயிற்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. நடைப்பயிற்சி, யோகா, மற்றும் எடை பயிற்சி போன்ற பலவிதமான இயக்கங்கள் உடலின் குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்துகின்றன. தீவிர உடற்பயிற்சி ரத்த சர்க்கரை மேலாண்மையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமா என்பது குறித்து பொதுவான கேள்விகள் உள்ளன. நீரிழிவு கல்வியாளர் மற்றும் உணவியல் நிபுணர் கனிகா மல்ஹோத்ரா, indianexpress.com-க்கு அளித்த பேட்டியில், அதிகப்படியான தீவிர உடற்பயிற்சி குளுக்கோஸ் கட்டுப்பாட்டை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் பற்றி விளக்கினார்.
தீவிர உடற்பயிற்சியும் ரத்த சர்க்கரை உயர்வும்:
"மிகத் தீவிரமான உடற்பயிற்சி (ஓட்டப்பந்தயம், அதிக எதிர்ப்புப் பயிற்சி) மன அழுத்த ஹார்மோன்களின் வெளியீடு காரணமாக தற்காலிக ரத்த சர்க்கரை உயர்வை (hyperglycemia) ஏற்படுத்தலாம்" என்று மல்ஹோத்ரா கூறுகிறார். அட்ரினலின் மற்றும் கார்டிசால் போன்ற ஹார்மோன்கள் கல்லீரலில் இருந்து குளுக்கோஸ் உற்பத்தியைத் தூண்டி, இன்சுலின் மூலம் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைத் தவிர்க்கின்றன. உடல் இந்த தீவிர உடற்பயிற்சியை ஒரு வகையான உடலியல் அழுத்தமாக உணர்வதே இதற்குக் காரணம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்த குளுக்கோஸ் அதிகரிப்பு பொதுவாக தற்காலிகமானது (உடற்பயிற்சிக்குப் பின் 30-120 நிமிடங்கள்) மற்றும் ஏற்கனவே அதிக குளுக்கோஸ் அளவுடன் (180 mg/dL க்கு மேல்) தொடங்கும் போது நீண்ட காலம் நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மிதமான தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளான விறுவிறுப்பான நடைப்பயிற்சி போன்றவற்றுக்கு இந்த விளைவு இல்லை, ஏனெனில் அவை மன அழுத்த ஹார்மோன்களை விட தசை குளுக்கோஸ் உறிஞ்சுதலை அதிகம் பயன்படுத்துகின்றன.
இன்சுலின் எதிர்ப்பு (அ) நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் அபாயங்கள்:
நீரிழிவு நோயாளிகளுக்கு தீவிர உடற்பயிற்சி குறிப்பாக ஆபத்தானது என்பதை மல்ஹோத்ரா ஒப்புக்கொள்கிறார். "அதிக குளுக்கோஸ் அளவுடன் (>200 mg/dL) உடற்பயிற்சி செய்யும்போது, கேட்டகோலமின் தூண்டப்பட்ட கல்லீரல் குளுக்கோஸ் உற்பத்தி ரத்த சர்க்கரை உயர்வை மேலும் அதிகரிக்கும்" என்று அவர் எச்சரிக்கிறார். மேலும், "உடற்பயிற்சிக்குப் பிந்தைய ரத்த சர்க்கரை குறைவு (hypoglycemia) (4-24 மணி நேரம் கழித்து) தசைகள்/கல்லீரலில் உள்ள கிளைக்கோஜன் சேமிப்பு குறைவதால் ஏற்படுகிறது, குறிப்பாக இன்சுலின்/மருந்துகள் சரிசெய்யப்படாமல் இருக்கும்போது."
டைப்-1 நீரிழிவு நோயாளிகளுக்கு, 250 mg/dL (அ) அதற்கு மேற்பட்ட ரத்த குளுக்கோஸ் அளவுகள் மற்றும் கீட்டோன்களின் இருப்புடன் உடற்பயிற்சி செய்வது கீட்டோஅசிடோசிஸ் (ketoacidosis) அபாயத்தை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இது போதுமான எரிபொருள் (குறைந்த உடற்பயிற்சிக்கு முந்தைய கார்போஹைட்ரேட்டுகள்) அல்லது மீட்பு நேரம் இல்லாததால் மேலும் வலுப்பெறுகிறது. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோயின் விரைவான தன்மை, உடல் கடுமையான உடல் அழுத்தத்திற்கு ஆளாகும்போது இருதய அமைப்புக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பது எப்படி?
"ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி, அதாவது சைக்கிள் ஓட்டுதல் (அ) நீச்சல், குளுக்கோஸ் அளவை குறைப்பதற்கும் A1C அளவுகளை மேம்படுத்துவதற்கும் சரியான தொடக்கமாகும்" என்று மல்ஹோத்ரா அறிவுறுத்துகிறார். வாரத்திற்கு 2-3 முறை தீவிர பயிற்சி அமர்வுகளை சேர்க்கலாம், ஆனால் 2 அமர்வுகளுக்கும் இடையில் குறைந்தது 48 மணிநேரம் இடைவெளி விட வேண்டும். கீழ்க்கண்ட அறிகுறிகள் உடற்பயிற்சி எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் என அவர் குறிப்பிடுகிறார். உடற்பயிற்சிக்குப் பிறகு ரத்த சர்க்கரை உயர்வு (250 mg/dL க்கு மேல்), ரத்த சர்க்கரை குறைவு (70 mg/dL க்கும் குறைவு), தொடர்ச்சியான சோர்வு, அதிகரித்த தாகம், கீட்டோன்களின் இருப்பு, மதிய நேர உடற்பயிற்சிகளுக்குப் பிறகு இரவு நேர ரத்த சர்க்கரை குறைவு
உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் குளுக்கோஸ் அளவை சரிபார்ப்பது ஆபத்தைக் குறைக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார். உடற்பயிற்சிக்கு முன் குளுக்கோஸ் செறிவு 100 mg/dL க்கும் குறைவாக இருந்தால், 15 கிராம் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ள வேண்டும். மிதமான உடற்பயிற்சி காலத்திற்கு முன்பு பேசல் இன்சுலினை குறைப்பதும் நன்மை பயக்கும். கீட்டோன்கள் இருக்கும்போது தீவிர இடைவெளி பயிற்சி (High-Intensity Interval Training) செய்வதைத் தவிர்க்கவும், தொடர்ச்சியான குளுக்கோஸ் மானிட்டர்களைப் பயன்படுத்தி போக்குகளைக் கண்காணிக்கவும் என்று மல்ஹோத்ரா முடிக்கிறார்.