புத்தாண்டு பிறந்ததும் நாம் எதிர்நோக்கும் முக்கிய பண்டிகையாக பொங்கல் பார்க்கப்படுகிறது. பொங்கல் அனைவரும் கொண்டாடும் வகையில் சமத்துவ விழாவாக விளங்குகிறது. விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் அதற்கு உதவி செய்யும் சூரிய பகவானுக்கும், மாடுகளுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கலை கொண்டாடினர்.
ஒவ்வொரு மாநிலத்தில் வெவ்வேறு விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதியான போகியில் இருந்து பொங்கல் விழா தொடங்குகிறது. எல்லோரும் தேவையில்லாத பொருட்களை எரித்து போகியை கொண்டாட வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், அதற்கு தேவையில்லை. நம் உள்ளத்தில் உள்ள தேவையில்லாத எண்ணங்களை அகற்றியே போகியை கொண்டாடலாம்.
போகி அன்று மாலை நேரத்தில் நம் வீட்டு தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். நம் குடும்பத்தில் குல தெய்வம் அல்லது நமக்கு இஷ்டமான தெய்வத்தை நினைத்து வழிபாடு நடத்த வேண்டும். இந்த பூஜையை மாலை 6 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும். வாழை இலையில் சாதம், வெல்லம், வாழைப்பழம் போன்ற பொருட்களை படையலாக வைத்து இந்த பூஜையை செய்ய வேண்டும்.
இதைத் தொடர்ந்து, 14-ஆம் தேதி தைப்பொங்கல் பிறக்கிறது. அந்த வகையில் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் பொங்கல் வைக்க வேண்டும். இந்த நேரத்தில் பொங்கல் வைக்க முடியாதவர்கள், காலை 6 மணி முதல் 8:50 மணிக்குள்ளாக பொங்கல் வைத்து விட வேண்டும். இதேபோல், காலை 10:35 முதல் 12 மணிக்குள்ளாகவும் பொங்கல் வைக்கலாம். வீட்டு வாசலில் விறகு அடுப்பிலும் பொங்கல் வைக்கலாம். அதற்கு சூழல் இல்லாதவர்கள் வீட்டில் கிட்சனுக்குள் பொங்கல் வைத்து வழிபடலாம்.
அதற்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடு உழவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதனால் மாடுகளை சிறப்பிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நம் முன்னோர்களுக்கு படையல் வைத்தும் வழிபடலாம். இவ்வாறு முன்னோர்களை வழிபடும் பழக்கம் கொண்டவர்கள், காலை 9:05 மணி முதல் 10:20 மணிக்குள் வழிபாடு நடத்தலாம். இதேபோல், 11 மணி முதல் 11:50-க்குள் வழிபடலாம். கூடுதலாக, 1:30 முதல் 2:30 மணிக்குள் வழிபாடு செய்யலாம்.
இது மட்டுமின்றி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்பவர்கள், நந்தி தேவனுக்கு பூஜை செய்யலாம். மேலும், அருகே இருக்கும் கோசாலைக்கு சென்று மாடுகளுக்கு உணவு கொடுக்கலாம்.