நாம் வாழும் நவீன உலகில் நம்மைச் சுற்றி இயற்கை வளங்கள் குறைந்து, மாசு நிறைந்து வருகிறது. இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும். குறிப்பாக மாசடைந்த காற்றாலும், புழுதியினாலும் முகத்தில் பல்வேறு சரும பிரச்சனைகள் வரும். அவையெல்லாம் போக்க நாம் தினமும் ஏதேனும் ஒரு வழியைத் தேடி அலைகிறோம். அதற்கான சிறந்த மருந்தாக விளங்குகிறது ஓட்ஸ்.
பெரும்பாலான வீடுகளில் இப்போதெல்லாம் ஓட்ஸ் இருக்கிறது. இந்த ஓட்ஸ் பயன்படுத்தி நீங்கள் உங்கள் சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.
பாதாம் - ஓட்ஸ் பேக்
2 - 3 பாதாம்; 2 டீ ஸ்பூன் பால்; 1 ஸ்பூன் ஓட்ஸ்
பாதாம் பருப்பை சந்தனம் இழைப்பது போல மைய்ய இழைத்துக்கொள்ளுங்கள். ஒரு வேலை சந்தனம் இழைக்கும் கட்டை இல்லையென்றால், பொடியாக இடித்துக்கொள்ளுங்கள். அந்த பாதம் பேஸ்ட்டை பாலில் சேர்த்து, அதனுடன் ஓட்ஸ் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் தட வேண்டும். பிறகு 15 - 20 நிமிடங்கள் வைத்து கழுவவும். இது முகத்தில் ஏற்பட்டிருக்கும் டேன் முற்றிலுமாக அகற்ற உதவும்.
தயிர் - ஓட்ஸ் பேக்
3 டீ ஸ்பூன் தயிர்; 1 ஸ்பூன் ஓட்ஸ்
தயிருடன் ஓட்ஸ் சேர்த்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் காய வைத்து கழுவினால் போதும். முகத்தில் தெரியும் பெரிய போர்ஸ் அனைத்தும் இறுக்கமாகி மூடிக்கொள்ளும்.
தேன் - ஓட்ஸ் பேக்
1 ஸ்பூன் தேன்; 1 ஸ்பூன் பால்; 1 ஸ்பூன் ஓட்ஸ்
மூன்றையும் ஒன்றாக கலந்து, புருவம் மற்றும் கண்கள் பகுதியில் படாமல் தடவுங்கள். 10 நிமிடம் அப்படியே வைத்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி செய்தால் வரண்ட சருமம் வழுவழுப்பாகும்.
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் நிச்சயம் நம் வீட்டில் இருக்கும். ஆகையால் மிகவும் எளிதான முறையில் சருமத்தை பாதுகாக்க இந்த பேக்குகள் உதவும்.