Blackheads Removal Tips Tamil News : குறைபாடாற்ற சருமம் பெற பல்வேறு விதமான வழிமுறைகளை நாம் முயற்சி செய்வதுண்டு. அதிலும் முகத்திற்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு அவசியம். முகப்பருக்கள், கருவளையம் உள்ளிட்ட முகத்தில் பதியும் விஷயங்களில் ஒன்று பிளாக்ஹெட்ஸ். அவை பொதுவாக எல்லா சரும வகைகளிலும், குறிப்பாக எண்ணெய் சருமத்தில் அதிகம் காணப்படுகின்றன. அவற்றை நீக்குவதற்காக சலூன்களுக்கும் பார்லர்களுக்கும் இனி செல்லவேண்டாம். சமையலறையில் இருக்கும் சில அத்தியாவசிய பொருள்களே போதும்.
முட்டையின் வெள்ளை பகுதி
பிளாக்ஹெட்டிலிருந்து விடுபட எளிதான மற்றும் சிறந்த பொருள் முட்டையின் வெள்ளை பகுதிதான். ஒரு முட்டையிலிருந்து வெள்ளை பகுதியை மட்டும் தனியாக எடுத்து, அதனோடு சிறிதளவு தேன் கலந்து அடர்ந்த பேஸ்ட்டாக செய்துகொள்ளவும். பின்னர் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, முகம் வறண்டு போகும் வரை சில நிமிடங்கள் அப்படியே விடவேண்டும். குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவி உலர வைக்கவும். முட்டையின் வெள்ளை பகுதி உங்கள் முகத்தில் இருக்கும் துளைகளை இறுக்கி பிளாக்ஹெட்ஸை அகற்றுகிறது. இது தேனுடன் இணையும்போது, உங்கள் சருமத்தை மென்மையாகவும், சுத்தமாகவும், மிருதுவாகவும் உணர வைக்கிறது.
தக்காளி
தக்காளி இல்லாத வீடே இல்லை. தக்காளியின் சதை பகுதியைக் குழைத்து, அதனை இரவு தூங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். காய்ந்த பிறகு படுகைக்குச் சென்று, காலையில் முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். நிச்சயம் மாற்றம் தெரியும். இயற்கை எக்ஸ்ஃபோலியேட்டராக தக்காளி கருதப்படுகிறது. எனவே, இது உங்கள் துளைகளைச் சுத்தம் செய்து, சருமத்தை எந்த நேரத்திலும் ஃபிரெஷாக உணர வைக்கும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா சமைப்பதற்கும், முகப்பருவை எதிர்த்துப் போராடுவதற்கும் மட்டுமல்ல, உங்கள் முகத்திலுள்ள பிளாக்ஹெட்டையும் சுத்தப்படுத்தும். ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை இரண்டு தேக்கரண்டி தண்ணீரில் கலந்து, சீரான பேஸ்ட் தயாரிக்கவும். தயாரித்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் உலரவிடுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் முகத்தைக் கழுவ வேண்டும். தக்காளியைப் போலவே, பேக்கிங் சோடாவும் இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஆனால், இதனை முயற்சி செய்வதற்கு முன், அந்த பேஸ்ட்டை உங்கள் கைகளில் சிறியளவு தேய்த்து சோதனை செய்துபார்க்க அறிவுறுத்தப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"