/indian-express-tamil/media/media_files/E5ZwI86qqXDvIAy7yTd1.jpg)
Homemade DIY Vapour Rub Cold and Cough Home Remedies homemade vicks
பருவநிலை மாறும்போது, சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் நம்மைத் தாக்குகின்றன. குறிப்பாகக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படுவதுண்டு. இதுபோன்ற நேரங்களில், உடனடியாக வேப்பர் ரப் (Vapor Rub) பயன்படுத்துவது வழக்கம். ஆனால், கடைகளில் கிடைக்கும் வேப்பர் ரப்களில் ரசாயனங்கள் கலந்திருக்கலாம். அதற்குக் பதிலாக, நம் வீட்டிலேயே இயற்கை வேப்பர் ரப் தயாரிக்கலாம். அது எப்படி என்று பார்ப்போம்.
ஹோம்மேட் வேப்பர் ரப்: செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
4-5 ஸ்பூன் நெய்
2 பச்சை கற்பூரம்
1 கண்ணாடி கன்டெய்னர்
செய்முறை:
ஒரு சிறிய கடாயை மிதமான தீயில் வைத்து, அதில் நெய்யைச் சேர்க்கவும். நெய் சூடானதும், பச்சை கற்பூரத்தைச் சேர்த்து அது கரையும் வரை கிளறவும். கற்பூரம் கரைந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, இந்த கலவையை ஒரு கண்ணாடி கன்டெய்னருக்கு மாற்றி வைக்கவும். சிறிது நேரத்தில் அது கெட்டியாகி, கடையில் வாங்குவது போலவே இருக்கும்.
இந்த வேப்பர் ரப்பை உபயோகிக்கும் முன் சில முக்கிய குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம்.
நெய்யை அதிக நேரம் சூடாக்க வேண்டாம், அது கருகிவிடும். கற்பூரத்தை நெய்யில் கரைத்ததும், முதலில் அடுப்பை அணைத்துவிட்டு, பிறகு கடாயை கீழே இறக்கவும். கற்பூரம் விஷத்தன்மை கொண்டது. உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதனால், முதல் முறை பயன்படுத்தும்போது, ஒரு சிறிய இடத்தில் தடவிப் பார்த்து ஒவ்வாமை உள்ளதா என உறுதி செய்துகொள்ளவும். இந்த வேப்பர் ரப்பை 3 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.
இது பாதுகாப்பானதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
சுகாதார நிபுணர் ப்ரீத்தி தியாகி இது மிகவும் சிறந்தது எனப் பாராட்டுகிறார். "இயற்கையான நெய், சருமத்துக்கு ஈரப்பதம் அளிப்பதுடன், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் தரும். இது குழந்தைகள், கைக்குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பானது. மார்புப் பகுதியிலும், பாதங்களின் கீழும் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்" என்கிறார்.
ஆனால், தோல் மருத்துவ நிபுணர் வந்தனா பஞ்சாபி ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுக்கிறார். "இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கற்பூரம் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. இது மூச்சுத்திணறல், வலிப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம். குழந்தைகளுக்குச் சருமம் மிகவும் மென்மையாக இருப்பதால் கற்பூரம் அவர்களுக்குத் தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்" என்று கூறுகிறார்.
குழந்தைகளுக்கு மாற்று வழி என்ன?
சளி, மூக்கடைப்பு உள்ள குழந்தைகளுக்கு இந்த வேப்பர் ரப்பை பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கு நிறைய நீர் அல்லது திரவ உணவுகளைக் கொடுங்கள். குடிநீரில் தேன் கலந்து கொடுக்கலாம், என்கிறார்.
எனவே, இந்த வீட்டு வேப்பர் ரப்பை பெரியவர்கள் பயன்படுத்தலாம். ஆனால், குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.