ஆண், பெண் என அனைத்து பாலினத்தவருக்கும் தங்கள் முகத்தை பிரகாசமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக விளம்பரங்களில் காண்பிக்கப்படும் எத்தனையோர் ஃபேஸ் கிரீம்களையும் வாங்கி பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால், ஒவ்வொருவருடைய சருமமும் வேறு விதமான தன்மை கொண்டிருப்பதால் இவை சில நேரத்தில் சரியான பலனளிக்காது.
மேலும், அடிக்கடி இது போன்ற ஃபேஸ் கிரீம்களை பயன்படுத்துவது சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமாக அமையும். இத்தகைய ஃபேஸ் கிரீம்களின் விலையும் அதிகமாகவே இருக்கும். இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் ஏதேனும் ஃபேஸ் கிரீமை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா என பலர் இணையத்தில் தேடி இருப்பார்கள். அவர்களுக்காகவே ஹோம்மேட் ஃபேஸ் கிரீம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
இதற்காக 15 பாதாம் பருப்புகளை இரண்டு முறை கழுவி விட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 12 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். பாதாம் பருப்பு இயற்கையாகவே கொலஜன் உற்பத்தியை தூண்டும் தன்மை கொண்டது. எனவே, இதனை சரும பராமரிப்பில் பயன்படுத்தலாம். இந்த பாதாம் பருப்புகள் ஊறிய பின்னர், அதன் தோல்களை நீக்க வேண்டும்.
இந்த தோல் நீக்கிய பாதாம் பருப்புடன், காய்ச்சாத பால் இரண்டு ஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். பின்னர், இதனை வடிகட்டி எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலக்க வேண்டும். இப்படி செய்தால் இயற்கையான ஃபேஸ் கிரீம் தயாராகி விடும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்தால் 10 நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.
இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக முகத்தை நன்றாக கழுவி விட்டு, இந்தக் கிரீமை இரண்டு துளிகள் எடுத்து முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர், மறுநாள் காலை முகத்தை சாதாரணமாக கழுவி விடலாம். இவ்வாறு செய்து வந்தால் முகம் பார்ப்பதற்கு பிரகாசமாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.