இன்றைய தலைமுறையின் பெரிய பிரச்சனை முடி உதிர்வாக இருக்குறது. இதற்கு சிலர் ஆயிரக்கணக்காக பணம் செலவளித்து ஹேர் ஆயில், ஷம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றில் இரசாயனம் கலந்திருப்பதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்கிறது. எனவே, இயற்கையான முறையில் ஹேர்பேக் செய்வது குறித்து இதில் காணலாம்.
2 டீஸ்பூன் அளவிற்கு கடுகு எடுத்துக் கொள்ள வேண்டும். கடுகு முடி அடர்த்தியை அதிகரிக்கும். இதை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். கடுகின் நிறம் மாறி வரும் போது, ஒன்றரை டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இதனுடன் சேர்க்க வேண்டும். வெந்தயம் முடியை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
இதைத் தொடர்ந்து ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதன் பின்னர், இவை அனைத்தும் ஆறியதும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். இதை ஒரு பாட்டிலில் அடைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் நேரத்தில் இதனை எடுத்து பயன்படுத்த வேண்டும்.
இந்தப் பொடியை நம் முடிக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு ஸ்பூன் பூந்திக் கொட்டை பொடி, அரை ஸ்பூன் கரிசலாங்கன்னி பொடி, அரை ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் சீவக்காய் பொடி சேர்த்து கலக்க வேண்டும். இத்துடன் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்க வேண்டும். அதன் பின்னர், 2 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
குறிப்பாக, குளிக்கும் போது ஒரு ஹேர்பேக் பயன்படுத்தி குளிக்க வேண்டும். அதற்காக சாதம் வடித்த தண்ணீர் ஒரு கப், காபி பொடி சிறிது அளவு சேர்த்து கலக்க வேண்டும். இதனை தலையில் தேய்த்து குளித்தால் முடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை என ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“