மழை, வெயில் என எந்த பருவ காலமாக இருந்தாலும் கொசுக்களின் தொல்லை அதிகமாக தான் இருக்கும். இந்த கொசுக்களை எளிமையான முறையில் விரட்டுவதற்கான கொசு விரட்டி செய்முறையை இப்பதிவில் காணலாம்.
வீட்டில் இருக்கும் நல்ல நறுமணம் வீசக் கூடிய பூக்களை எடுத்து நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அடுப்பில் தோசைக் கல் வைத்து அதன் மீது இந்த பூக்களை லேசாக வறுத்து எடுக்க வேண்டும். இதையடுத்து பூக்களை வேறு ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளலாம்.
இப்போது, 6 அல்லது 7 கிராம்புகள், ஒரு துண்டு பட்டை ஆகியவற்றுடன், வறுத்து வைத்திருந்த பூக்களை சேர்த்து பொடியாக அரைத்து எடுக்க வேண்டும். இதனுடன் கம்ப்யூட்டர் சாம்பிராணி மற்றும் 3 அல்லது 4 கற்பூரங்களை பொடியாக்கி சேர்க்க வேண்டும். இறுதியாக ஒரு ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் வேப்பெண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும்.
இப்படி செய்தால் இயற்கையான கொசு விரட்டி தயாராகி விடும். இதில் இரசாயனங்கள் சேர்க்காததால் நம் உடலுக்கும் தீங்கு விளைவிக்காது. வீட்டில் இருக்கும் எளிமையான பொருள்களைக் கொண்டு செய்வதால் இதற்காக அதிக பணமும் செலவாகாது.
இவற்றை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு டப்பாவில் போட்டு அடைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்படும் நேரத்தில் இதை எடுத்து பற்ற வைத்தால், இதில் இருந்து வெளியாகும் புகைக்கு, வீட்டில் இருந்து கொசுக்கள் மறைந்து விடும்.