காய்ந்த பூக்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு நம் வீட்டிலேயே சாம்பிராணி செய்யலாம். இதற்கான செய்முறை குறித்து தற்போது பார்க்கலாம். எளிமையான முறையில் இருப்பதால் இந்த வழிமுறையை சுலபமாக பின்பற்றலாம்.
சாமந்தி பூ, நாட்டு ரோஜா, பன்னீர் ரோஜா, மல்லிகை பூக்கள், சம்பங்கி, மரிக்கொழுந்து, செவ்வந்தி போன்ற பூக்களை வீட்டில் பூஜைக்காக பயன்படுத்துவோம். இந்த பூக்கள் காய்ந்ததும் இவற்றை தூக்கி வீசாமல், இதில் இருந்து சாம்பிராணி செய்யலாம்.
இந்த பூக்கள் அனைத்தும் காய்ந்ததும் அதில் இருந்து காம்புகளை மட்டும் நீக்கி விட்டு, இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். பூக்களை கசக்கும் போது அவை நொறுங்கி விழும் பதம் வரும் வரை வெயிலில் காய வைப்பது அவசியம் ஆகும்.
5 கற்பூரம்,10 ஏலக்காய்கள், 10 கிராம் சோம்பு, 7 அல்லது 8 கிராம்புகள், 5 அல்லது 6 பச்சைக்கற்பூரம், தசங்கம் ஆகியவற்றுடன் காய்ந்த பூக்களை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.
இந்த சாம்பிராணி பொடியை மீண்டும் ஒரு நாள் வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும். இவை நன்றாக காய்ந்ததும் நெய், பன்னீர், தேன், தண்ணீர் சேர்த்து பிசைந்து எடுக்க வேண்டும். இதன் பின்னர் நமக்கு பிடித்தமான வடிவத்தில் அச்சு எடுத்து சாம்பிராணியை பயன்படுத்தலாம்.
கடைகளில் இருந்து வாங்கப்படும் சாம்பிராணியை விட வீட்டிலேயே இவ்வாறு செய்யும் சாம்பிராணியில் மனம் கூடுதலாக வீசும்.