மாடித்தோட்டம் அமைக்க தமிழக அரசு வழங்கும் கிட்: ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?
தமிழ்நாடு அரசு தோட்டக் கலை சார்பாக மாடித் தோட்டம் அமைப்பதற்கான பொருட்கள் அடங்கிய தொகுப்பை குறைவான விலையில் விநியோகித்து வருகின்றனர். இந்த தொகுப்பை எப்படி வாங்குவது என இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
சிறிய வீட்டில் வசிப்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இருக்கக் கூடிய குறைவான இடத்தில் மாடித் தோட்டம் பராமரித்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை அறுவடை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், இதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் விலை அதிகமாக இருக்கக் கூடும் எனக் கருதி வாங்காமல் இருப்பார்கள்.
Advertisment
அத்தகைய தயக்கம் கொண்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு தோட்டக் கலை சார்பாக மாடித் தோட்டம் அமைப்பதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இந்தப் பொருட்களை அரசு விற்பனை செய்வதால், மானிய விலையில் இவை வழங்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.
அதன்படி, மாடித் தோட்டம் தொகுப்பு மற்றும் மூலிகை தோட்டம் தொகுப்பு என இரண்டு வகையாக இந்த பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதில் மாடித் தோட்டம் பொருட்கள் அடங்கிய தொகுப்பில் காய்கறி விதைகள் கிடைக்கும். மூலிகைகள் அடங்கிய பொருட்கள் மற்றொரு தொகுப்பில் வழங்கப்படும்.
அந்த வகையில் மாடித் தோட்டம் தொகுப்பில் ஆறு செடி வளர்ப்பு பைகள், மொத்தம் 12 கிலோ எடையிலான தென்னை நார் கழிவு கட்டிகள், ஆறு காய்கறி விதைகள், செடி வளர்ப்புக்கு தேவையான உரங்களான 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ட்ரைகோடெர்மா விரிடி, 100 மி.லி வெப்பெண்ணை மருந்து மற்றும் மாடித் தோட்ட காய்கறி வளர்ப்பு முறைக்கான கையேடு ஆகியவை கொடுக்கப்படும். இதன் மொத்த விலை ரூ. 900 இருக்கும் நிலையில், மானிய விலையாக ரூ. 450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisment
Advertisements
ஒரு நபர் தனது ஆதார் அட்டை விவரங்களை சமர்ப்பித்து அதிகபட்சமாக இரண்டு தொகுப்புகள் வரை இதனை பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகுப்பை https://tnhorticulture.com/kit/ என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பெற முடியும். இல்லையென்றால், நம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தோட்டக் கலை அலுவலகத்திற்கு நேரில் சென்று நமது விவரங்களை பதிவு செய்தும் பெற்றுக் கொள்ளலாம். அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்பவர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை உடன் எடுத்து செல்ல வேண்டும்.