நாம் வாழும் பூமி நாளுக்கு நாள் மாசடைந்து கொண்டு வருகிறது. சுவாசிக்கும் காற்று முதல் அனைத்திலும் இரசாயனங்கள் மற்றும் நச்சுகள் கலந்திருக்கின்றன. அந்த வகையில் காற்றில் பரவி இருக்கும் நச்சு மற்றும் இரசாயனங்களை வடிகட்டி தூய்மையான ஆக்சிஜனை அளிக்கும் 6 செடிகள் குறித்து தற்போது காணலாம். இந்த செடிகளை நம் வீட்டில் வளர்ப்பதற்கு சுலபமாக இருக்கும்.
ரப்பர் செடி
இதனை ரப்பர் செடி என்று அழைப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் Ficus elastica ஆகும். இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் கிழக்குப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இந்த தாவரத்தை வீட்டில் வளர்ப்பது மிக எளிது. ஈரத்துணி கொண்டு இதன் இலைகளை துடைத்தால் கூட போதுமானதாக இருக்கும். இவற்றை நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்கக் கூடாது.
Common Ivy
Common Ivy என்ற பெயர் கொண்ட இந்த தாவரத்தை English Ivy என்றும் அழைப்பார்கள். இது ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் வெளிப்புறத் தோற்றத்திற்காக பெரும்பாலான மக்கள் இதனை, வீட்டில் வளர்க்க விருப்பப்படுகின்றனர். இந்த தாவரத்தை நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்கக் கூடாது. இந்த தாவரம் இருக்கும் மணலை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
பீஸ் லில்லி (Peace lily)
இந்த செடி அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டன. புதிதாக செடிகள் வளர்க்க வேண்டும் என்று விருப்பப்படுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும். இதற்கு மாதத்திற்கு ஒரு முறை இயற்கையான உரங்கள் தெளிக்க வேண்டும். மேலும், குறைவான வெளிச்சத்தில் வைத்து தேவைக்கேற்ப தண்ணீர் விட வேண்டும்.
சிலந்திச் செடி
பார்ப்பதற்கு சிலந்தி போன்ற தோற்றம் கொண்டிருப்பதால், இந்தச் செடியை இவ்வாறு அழைக்கின்றனர். இவை வெப்பமண்டல மற்றும் தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட செடியாகும். இந்தச் செடி கார்பன்மோனாக்சைடை எளிதாக உறிந்து கொள்கிறது. அறையில் இருக்கும் வெப்ப நிலைக்கு இந்த செடி எளிதாக வளரக் கூடியதால் பராமரிப்பும் குறைவும். தேவைப்படும் போது மட்டும் தண்ணீர் விட்டு பராமரிக்கலாம்.
பாம்பு செடி
பார்ப்பதற்கு பாம்பு போன்று படர்ந்து இருப்பதால், இந்தப் பெயர் பெற்று விளங்குகிறது. மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த செடி தற்போது நம் ஊர்களில் பரவலாக காணப்படுகிறது. குறைவான பராமரிப்பு, மிகக் குறைந்த நீர் மற்றும் சூரிய ஒளி போதுமானதாக இருப்பதால், இதனை நிறைய பேர் தங்கள் வீட்டில் வளர்க்கின்றனர்.
பொத்தோஸ்
போத்தோஸ் என்பது சீனா, இந்திய துணைக்கண்டம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற பகுதிகளில் உள்ள பூக்கும் தாவரங்களின் ஒரு இனமாகும். இதற்கு சூரிய வெளிச்சம் அதிகமாக இருந்தால் நிறைய தண்ணீரும், குறைவாக இருந்தால் குறைவான அளவில் தண்ணீரும் தெளித்தால் போதும்.
இந்த அனைத்து தாவரங்களிலும் காற்றில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் இரசாயனங்களை சுத்தகரிக்கும் ஆற்றல் இருப்பதால், இதனை வளர்க்க மக்கள் விரும்புகின்றனர்.