குழந்தைகள் உலகம்.... கோடையில் என்ன செய்யலாம்?

உங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் பகுதிகள், சந்து பொந்துகள் எல்லாம் உங்களுக்கு அத்துப்பிடியாவதற்கு இதுதான் நேரம். உங்களுக்குதான் மிதிவண்டி ஓட்டத் தெரியுமே? சுற்றிப் பாருங்கள்.

சந்திரன்

என்ன குழந்தைகளே… ஆண்டுத் தேர்வு முடிந்து கோடை விடுமுறை தொடங்கியாச்சா? இன்னும் இரண்டு மாதங்களுக்கு சந்தோஷம்தான். அதுவும், வெயில் அனலாய் கொளுத்துவதால், இந்த ஆண்டு விடுமுறை முன்கூட்டியே வந்தாச்சு… உங்க மகிழ்ச்சி இரண்டு மடங்காயிருக்கும்.

சரி… இந்தக் கோடை விடுமுறையை எப்படி கழிக்கப் போகிறீர்கள்? கிரிக்கெட் விளையாடக் கற்றுக்கொள்வது, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசப் பழகுவது, ஓவியம் இசை போன்ற கலைகளைக் கற்பது, கம்ப்யூட்டர் வகுப்புகளில் சேருவது போன்ற பல திட்டங்களை ஏற்கெனவே போட்டிருப்பீர்கள்தானே?

பயனுள்ள வகையில் ஏதாவது கற்க வேண்டும் என்ற உங்களது துடிப்பிற்கு முதலில் வாழ்த்துக்கள். ஆனால், அந்த வகுப்புகளில் சேர்வதற்கு முன்னால் கொஞ்சம் யோசனை செய்யுங்கள்.இந்த மாதங்கள் உங்களுக்கான காலம். மீண்டும் பள்ளி தொடங்கினால் உங்கள் நேரம் உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அதிலும், நீங்கள் ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவரா? அடுத்த கோடை விடுமுறையும் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.

“அப்படியென்றால்,  எங்களை கோடை கால வகுப்புகளில் சேர வேண்டாம் என்கிறீர்களா?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், இந்த வகுப்புகளில் கோடை காலத்தில்தான் சேர வேண்டுமா என்ன? இந்த வகுப்புகளை விட முக்கியமான வேலைகள் இந்த கோடை காலத்தில் இருக்கின்றன. உங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் பகுதிகள், சந்து பொந்துகள் எல்லாம் உங்களுக்கு அத்துப்பிடியாவதற்கு இதுதான் நேரம்.

உங்களுக்குதான் மிதிவண்டி ஓட்டத் தெரியுமே? சுற்றிப் பாருங்கள்.
உங்கள் அப்பா-அம்மா அல்லது பாட்டி-தாத்தா சின்ன வயதில் இருந்த ஊர்களுக்குப் போய் வாருங்கள். உங்கள் அத்தை, மாமா வீடுகளுக்குச் சென்று சில வாரங்கள் தங்கி பாருங்கள். வீட்டில் தினமும் அம்மா தானே சமையல் செய்யறாங்க? அவங்களிடம் கேட்டு சமையல் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒருவேளை நாளை வெளியூருக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ சென்று படிக்க வாய்ப்பு கிடைத்தால், உங்கள் துணிமணிகளை நீங்கள்தான் தோய்த்து இஸ்திரி போட வேண்டியிருக்கும். வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தால், உங்களுக்கு சமைக்கத் தெரியவில்லை என்றால் கஷ்டம்தான்.

இன்னும் இருக்கு. உங்கள் வீட்டில் சின்னத் தோட்டம் வைக்கும் அளவுக்கு இடமிருக்கா? இல்லையென்றாலும் பரவாயில்லை. பெற்றோரை கேட்டு ஒரு பூந்தொட்டி வாங்கி வையுங்கள். சின்னதாக, ஒரு ரோஜா செடி வைத்துப் பராமரியுங்கள். உங்கள் பகுதியில் வசிக்கும் நண்பர்களோடு விளையாடுங்கள்.

உங்கள் அப்பா சொந்த தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, பணிபுரிபவராக இருந்தாலும் சரி, உடன் சென்று அவர்கள் வேலை செய்வதை கவனித்துப் பாருங்கள்.

உங்கள் பகுதியைச் சுற்றி இயற்கையான விளையும் பொருள்கள், பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் என்று பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள இந்தக் கோடை விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால், பெற்றோரைக் கேட்டு குடும்பத்தோடு சுற்றுலா செல்லுங்கள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியம், வெயிலில் சுற்றுவது.  “என்னது இது? இந்த 110 டிகிரி வெயிலில் சுற்றுவதா?” என்று அலறாதீர்கள். இந்த வெயில் காலத்திலும் உங்கள் அப்பா வெளியில் சென்று வரத்தான் செய்கிறார். அதற்கு அவர் சிறு வயதில் வெயிலில் ஓடியாடி விளையாடியதுதான் காரணம். அதேபோல, இப்போது நீங்கள் கொஞ்சமாவது வெயிலில் சுற்றினால் தானே பெரியவராகும்போது ஆரோக்கியமான உடம்பு இருக்கும்?

ஆனால், வெயிலில் சுற்றும் அதே நேரத்தில் இளநீர் அருந்துவது, வெள்ளரி பிஞ்சு, நுங்கு போன்ற வகைகளை சாப்பிடுவது, கைக்குட்டையால் முகத்தை மூடிக் கொள்வது என்று பாதுகாப்புடன் இருங்கள்.இவையெல்லாம், கோடை விடுமுறையைக் கழிப்பதற்கான யோசனைகள் மட்டுமே. உங்களுக்கு இதை விட நல்ல யோசனைகள் தோன்றலாம். ஏனென்றால், சுட்டிக் குழந்தைகளே, நீங்கள் புத்திசாலிகள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close