Advertisment

பொங்கல் பண்டிகையின் மருத்துவ மகத்துவம்!

நம் முன்னோர்கள் காலத்தை கணிக்கும் போது, ஒரு வருடத்தை இரண்டு பகுதிகளாக உத்தராயணம் மற்றும் தக்ஷிணாயணம் என்று பிரித்தனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பொங்கல் பண்டிகையின் மருத்துவ மகத்துவம்!

தை மாதம் பிறக்கும் முதல் தினத்தில் தமிழகத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் 'பொங்கல்' திருநாளானது மிக முக்கியமான திருவிழாவாக கருதப்படுகிறது. இதே நாளில் இத்திருவிழா, வட இந்தியாவில் 'லோஹ்ரி' எனவும், அஸ்ஸாமில் 'மாக பிகு' எனவும், குஜராத்தில் 'உத்தராயன்' எனவும், வங்காளம், ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் 'மகர ஸங்க்ராந்தி' எனவும் கொண்டாடப்படுகின்றன. இந்த திருவிழாவானது, விவசாய மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, புதியதாக அறுவடை செய்யப்பட்ட அரிசி தானியங்களை கொண்டு, சூரியனுக்கு முன்பாக மண் பானைகளில் வெல்லம், தேங்காய், நெய், ஏலக்காய் போன்றவை சேர்த்து சர்க்கரை பொங்கலாகவும், வெண் பொங்கலாகவும் பொங்கலிட்டு, வாழை இலைகளில் படையலிட்டு, புதியதாய் அறுவடை செய்யப்பட்ட செங்கரும்பு, வாழைப்பழம் ஆகியவையும் சேர்த்து சூரியனின் முன்பு படையலிட்டு வணங்குவர்.

இந்த கலாச்சாரம் மிக்க திருவிழாவின் பின்னால் ஆரோக்கியம் சார்ந்த பல குணங்களும் அமைந்துள்ளன. அதனை பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது.

நம் முன்னோர்கள் காலத்தை கணிக்கும் போது, ஒரு வருடத்தை இரண்டு பகுதிகளாக உத்தராயணம் மற்றும் தக்ஷிணாயணம் என்று பிரித்தனர். உத்தராயணத்தில் சூரியன் உதிக்கும் திசை முதலில் கிழக்கில் தோன்றி படிப்படியாக வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து பின் மீண்டும் கிழக்கு திசைக்கே திரும்பும்.

தக்ஷிணாயணம் என்பது சூரியன் உதிக்கும் கிழக்கில் தொடங்கி படிப்படியாக தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து பின் மீண்டும் கிழக்கு திசைக்கே திரும்பும். உத்தராயணம் வெயில் காலத்தையும், தக்ஷிணாயணம் குளிர் காலத்தையும் குறிக்கும். இந்த தை மாத பிறப்பான 'பொங்கல்' பண்டிகையின் தினம் உத்தராயணம் தொடங்குவதன் முதல் நாளாகும். இந்த காலகட்டத்தில் படிப்படியாக குளிர் குறைய தொடங்கி சூரிய வெப்பம் அதிகரிக்க தொடங்குகிறது.

இந்த தை மற்றும் மாசி மாதத்தில் மக்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், பசியும் நன்றாக இருக்கும். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் பனிக்காற்று குறைய தொடங்கி, வெயில் அதிகரிக்கும்போது உடல் ஆரோக்கியம் குறையக்கூடும். ஆகையினால் தான் இந்த தை மாதத்தில் சூரியனின் வெப்ப காலத்தை வரவேற்க, மேன்மேலும் விவசாயம் மேலோங்க விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட புதிய அரிசி மற்றும் செங்கரும்பிலிருந்து சாறு பிழிந்து இயற்கையாக உருவாக்கப்பட்ட வெல்லம் சேர்த்து பொங்கல் படைத்து சூரியனை வழிபடுகின்றனர். இந்த இனிப்பான பொங்கல் விருந்தானது நம்முடைய உடல் உஷ்ணத்தை குறைத்து தேக ஆரோக்கியம் வலுப்பட உதவுகிறது. பொங்கலுடன் பல காய்கறிகள் சேர்த்த கூட்டும் அவியலும் புளி குழம்பும் சேர்த்து உண்ணும்போது அவை செரிமானத்தை அதிகரிக்க செய்கின்றன.

போகி பண்டிகையில் நாம் 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்று சொல்வதும் நம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதே ஆகும். போகி பண்டிகையில் வீடுகளின் மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்வதன் மூலம் பல கிருமிகள் மூலம் பரவும் நோய்கள் தடுக்கப்படுகின்றன. பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் உருவாகும் புகை மண்டலம் பனியை நீங்க செய்கின்றன. வாசலில் தெளிக்கும் சாணம், வேறு கிருமிகள் வீடுகளில் புகாமல் தடுக்கின்றன. அதுமட்டுமல்லாது, இந்நாள் வரை குளிரில் வீட்டில் உபயோகித்த பாய்கள், துணிகளை துவைத்து வெயிலில் காய வைப்பதன் மூலம் பல நோய்கள் வராமலும் பரவாமலும் தடுக்க முடியும்.

ஆக மொத்தமாக நாம் கொண்டாடும் இந்த பொங்கல் திருவிழாவின் மூலம் நாம் நம்முடைய பாரம்பரிய கலாச்சார முறைகளை பின்பற்றுவதால், ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமல்லாமல், பின்வரும் வெயில் காலங்களில் பற்பல நோய்கள் வராமல் தடுத்து கொள்ளவும் வழிவகை செய்கிறது. தமிழக மக்கள் அனைவருக்கும் வளமுடனும் நலமுடனும் பொங்கல் நன்னாளை கொண்டாட ஆரோக்கியமான பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கட்டுரை: Dr.D.Ragavendran, Chief Medical Officer, Saigram Ayurveda Hospital and Research Institute, Coimbatore.

Pongal Festival
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment