'ஸ்ட்ரெஸ்' : இதை எப்படி அவாய்ட் செய்வது?

பிரச்சினை என்பது ஓடினால் துரத்தும் நாயைப் போன்றது. நேருக்கு நேர் எதிர்கொண்டால் பம்மிவிடும்.

ராஜலட்சுமி சிவலிங்கம்

எதற்கெடுத்தாலும் சர்வ சாதாரணமாக நாம் ஸ்டைலாக ‘ஒரே ஸ்ட்ரெஸ்சா’ இருக்கு என்று கூறிவிடுகிறோம். ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் உண்மையில் சாதாரணமான விஷயம் அல்ல. அது தோலைப் பாதிப்பதிலிருந்து தொடங்கி, மாரடைப்பு என்னும் பெரிய நெருக்கடிவரை உங்களைக் கொண்டு செல்லக்கூடிய மோசமான ஒரு நிலவரம்.

ப்ரீ-கேஜி குழந்தை முதல் பதவி ஓய்வு பெற்ற நபர் வரை யாரையும் விடுவதில்லை இது. மன அழுத்தத்தால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து உங்களைப் பாதுகாத்து வாழ்நாளை அதிகரிக்கச் செய்ய வேண்டுமா? இதோ சில வழிமுறைகள்:

1. அவசரமும் நேரநெருக்கடியும் மன அழுத்தத்துக்கு முக்கியக் காரனங்கள். அன்றாடச் செயல்களுக்கான ஒரு அட்டவணையைத் தயாரித்து அதை முறையாகப் பின்பற்றுங்கள். அன்றாடம் மேற்கொள்ளும் வேலைகளைப் பட்டியல் போட்டு, அதற்கான நேரங்களையும் தீர்மானித்துக்கொள்ளுங்கள். அதைக் கண்டிப்பாக பின்பற்றுதல் நல்ல பலன் தரும். இப்போது இணையத்தின் வழியாக நிறைய வேலைகளை செய்து முடிக்க முடிகிறது என்பதால், அதை பரிபூர்ணமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

2. உங்கள் நாளைச் சீக்கிரமாகவே தொடங்குங்கள். இதனால், கால தாமதம், காலக்கெடுவுக்குள் வேலை முடிக்க வேண்டும், போக்குவரத்து நெரிசல் ஆகிய எதற்காகவும் மன அழுத்தத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம். எல்லாமே திட்டமிட்டபடி எளிதாக நடைபெறும்.

3. சந்தோஷம் கொள்ளச் செய்யும் விஷயங்கள் உள்ளடக்கிய ஒரு அட்டவணையைத் தயாரித்துக்கொள்ளுங்கள். அவற்றை அடிக்கடி செய்யுங்கள். அதாவது இசை கேட்பது, புத்தகம் பார்பது, டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் பார்ப்பது, நண்பர்களுடன், குடும்பத்தினரிடம் இயல்பாகப் பேசுவது எனப் பல விதமாக இருக்கலாம். இதற்காகக் காலையிலும் மாலையிலும் ஐந்து பத்து நிமிடங்களையேனும் ஒதுக்குங்கள். இது உங்களுக்கு மன மகிழ்ச்சியையும், நேர்மறை உணர்வையும் ஆற்றலையும் தரும்.

4. பிரச்சினையை ஏற்றுக்கொள்ளுங்கள். அதை விட்டு ஓடி ஒளிவதற்கு பதில் எதிர்கொள்ளுங்கள். பிரச்சினை என்பது ஓடினால் துரத்தும் நாயைப் போன்றது. நேருக்கு நேர் எதிர்கொண்டால் பம்மிவிடும். இது உங்களுக்கு மனவலிமையைத் தரும், தீர்வு பிறக்கவும் வழிகாட்டும்.

5. மன அழுத்தம் தரும் சூழல்களில் நம்மை கவனித்துக்கொள்வதை நிறுத்திவிடுகிறோம், அல்லது எது கிடைத்தாலும் கபளீகரம் செய்துவிடுகிறோம். ‘ஸ்ட்ரெஸ் வந்துட்டாலே (அது என்னமோ இந்த விஷயத்தில் நாம் எல்லாருமே உளவியல் மருத்துவராகிவிடுகிறோம்!) ஒண்ணு ரெண்டு நாளைக்கு சாப்டவே மாட்டேன். இல்லாட்டி ஒரேயடியா சாப்டுட்டே இருப்பேன்’ என்ற மனநிலையில் இருக்கக் கூடாது.

6. மன அழுத்தத்திலிருந்து விடுபட மிகச் சிறந்த வழிமுறை தியானம். மணிக் கணக்கில தியானம் பண்ண வேண்டாம். வெறும் 20 நிமிஷம் கவனத்தோடு தியானம் செய்தாலே ஓய்வாகப், புத்துணர்ச்சியாக உணருவோம்.

பழக்க வழக்கங்கள்

அன்றாடம் மேற்கொள்ளும் பழக்க வழக்கங்களைப் பின்வருமாறு திருத்தி அமைத்துக்கொண்டாலே போதும்:

தேயிலை, காபியைத் தவிர்த்தல் அல்லது குறைத்தல், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்தல், மோதலைத் தவிர்த்தல், பிறரின் கருத்துக்கு மரியாதை கொடுத்தல், பசிக்கும் நேரத்தில் சாப்பிடுதல், தூங்க வேண்டிய நேரத்தில் தூங்குதல், எதிர்மறை பதில்களை இன்முகத்துடன் எதிர்கொள்தல், முடியாது, மாட்டேன், சான்சே இல்லை என்பதற்கு பதில் நாசூக்காகவும் இனிமையாகவும் மறுக்க கற்றுக்கொள்தல்.
மூச்சுப் பயிற்சி, நடைப் பயிற்சி இரண்டுமே வெகு எளிதான விஷயங்கள். ஆனால், கைமேல் பலன் தருபவை.

பிடித்த இடங்களுக்குச் செல்தல், பிடித்தவர்களைப் போய்ப் பார்த்தல், நன்மை செய்யாவிட்டாலும் யாருக்கும் தீமை செய்யாமல் இருத்தல்.
நம் உணர்வுகளும், குணாம்சங்களும் அவற்றை நாம் கையாளும் விதங்களும்தான் மன அழுத்தம் வரக் காணங்களாக உள்ளன என்பதைப் புரிந்துகொண்டாலே அதைச் சரிசெய்யவும் நமக்குள்ளேயே வழிபிறக்கும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close