இந்தியா முழுவதும் அக்டோபர் 4 ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் ஆயுத பூஜையை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், ஆயுத பூஜையை கொண்டாட சரியான நேரம் எது? எப்படிக் கொண்டாடுவது? போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.
அக்டோபர் 4 ஆம் தேதி நவமி திதியன்று ஆயுத பூஜையும், அக்டோபர் 5 ஆம் தேதி தசமி திதியில் விஜயதசமியும் கொண்டாடுகிறது. இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் இவ்விரு பண்டிகைகளையும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: கல்வி அதிபதி சரஸ்வதி தேவியை வழிபட உகந்த நேரம்
ஆயுத பூஜை நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக உள்ளது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமி திதியில் ராமன் மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி அடைந்ததைப் போற்றும் விதமாக விஜய தசமி தினம் கொண்டாடப்படுவதாக புராணக்கதைகள் சில கூறுகின்றன. இந்த போருக்காக துர்க்கை தெய்வம் ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை கொண்டாடும் விதமாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை அன்று, பொதுமக்கள் அவர்களின் தொழிலுக்கு பயன்படுத்தும் உபகரணங்கள், வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்களை வைத்து வணங்குவார்கள், இது சாஸ்திர பூஜை அல்லது அஸ்திர பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.
ஒன்பதாம் நாள் நவமி திதியில் ஆயுத பூஜை செய்து, தசமி திதியில் அம்பாளின் வெற்றியை கொண்டாட வேண்டும். 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி துவங்கி, அக்டோபர் 4 ஆம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை கொண்டாட உகந்த நேரம்
ஆயுத பூஜை அன்று முக்கியமான நேரங்கள் என்னவென்றால், அக்டோபர் 4 ஆம் தேதி, சூரிய உதயம் காலை 6:23 மணிக்கு தொடங்குகிறது. அந்த நாளில் மாலை 6:07 மணிக்கு சூரியன் அஸ்தமனம் ஆகிறது. நவமி திதி தொடங்கும் நேரம் அக்டோபர் 03, 2022 மாலை 4:38 மணி ஆகும். நவமி திதி முடியும் நேரம் அக்டோபர் 04, 2022 அன்று பிற்பகல் 2:21 மணி ஆகும். சந்தி பூஜை முகூர்த்தம் அக்டோபர் 4 ஆம் தேதி, பிற்பகல் 1:57 மணிக்கு தொடங்கி 2:45 மணிக்கு முடிவடைகிறது.
ஆயுத பூஜை எப்படி கொண்டாடுவது?
ஆயுத பூஜையன்று நம் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள், வீட்டில் உள்ள அத்தியாவசிய உபகரணங்கள் ஆகியவற்றை வைத்து வழிபட வேண்டும். தொழிற்சாலை அல்லது தொழில் செய்யும் இடங்களில் உள்ள உபகரணங்களை சுத்தப்படுத்தி, மஞ்சள் மற்றும் சந்தனம் கலந்து அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும். வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள வாகனங்களை கழுவி, குங்குமம் சந்தனம் வைத்து, மாலை சூட்டவேண்டும். மாணவர்கள் தங்கள் புத்தகங்களில் படிப்பு சம்பந்தப்பட்ட உபகரணங்களில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.
துர்க்கை அன்னை முன் அனைத்தையும் படைத்து பின்னர் பஜனைகள் பாடி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்க்கை, அடுத்த 3 நாட்கள் லட்சுமி, கடைசி 3 நாட்கள் சரஸ்வதியை முதன்மைபடுத்தி வழிபடுகிறோம். ஆனால் ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவி, பார்வதி தேவி, லக்ஷ்மி தேவி, ஆகிய மூவருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சிலர் திருஷ்டி கழிக்கும் விதமாக வெள்ளைப் பூசணிக்காய் மீது மஞ்சள் பூசி வாகனத்தின் முன் உடைத்து அனைத்து விதமான தோஷங்களையும் நீக்குகின்றனர். சிறிய ஊசி தொடங்கி கத்தி, அரிவாள், சமையல் கருவிகள், கத்தரிக்கோல், ஸ்பேனர்கள், கணினி, வேறு இயந்திரங்கள், புத்தகங்கள் போன்ற அனைத்து வகையான கருவிகளையும் வைத்து வழிபடுகின்றனர். இந்த பண்டிகையை வடகிழக்கு மாநிலங்களில் மகா நவமி என்றும், ஒடிசாவில், அஸ்திர பூஜை என்றும் கொண்டாடுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil