அறுசுவை உணவு உடனடியாக… சமையல் செய்யலாம் வாங்க!

வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. சிலர் தங்களுக்கு தேவையானவற்றை தங்களே சமைத்து சாப்பிடுவதில் கைதேர்ந்தவர்கள்.

ராஜலட்சுமி சிவலிங்கம்

வாய்க்கு  ருசியாக சாப்பிட வேண்டும் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. சிலர் தங்களுக்கு தேவையானவற்றை தங்களே சமைத்து சாப்பிடுவதில் கைதேர்ந்தவர்கள். சிலருக்கோ சமையல் என்றால் என்னவென்றே தெரியாது.  அதைவிடுங்கள், தற்போது ப்ரெஞ்ச்  டோஸ்ட் எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம் வாருங்கள்.

ப்ரெஞ்ச்  டோஸ்ட்

தேவையான பொருட்கள் : கோதுமை பிரட் – 4 துண்டுகள் முட்டை – 2 , பால் – 1/4 கப், சிவப்பு மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி, வெண்ணெய் – 4 தேக்கரண்டி , உப்பு மற்றும் மிளகு தூள் – ருசிக்கு.

மசாலாவுக்கு தேவையான பொருட்கள் : தக்காளி – 1 சிறியது , வெங்காயம் – 1 சிறியது , பச்சை மிளகாய் – 1 , சாட் மசாலா – 1 தேக்கரண்டி , கொத்தமல்லி இலை – சிறிதளவு.

செய்முறை : தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் நறுக்கிய தக்காளி,  வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக கலந்து வைக்கவும். பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி விட்டு முக்கோண வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.

பின்னர், தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் பட்டரை போடவும். ஒரு பிரட் துண்டை எடுத்து அதை முட்டை கலவையில் நன்றாக முக்கி எடுத்து தோசை கல்லில் போட்டு இருபக்கமும் நன்றாக சிவக்க டோஸ்ட் செய்யவும். அனைத்து பிரட் துண்டுகளையும் இவ்வாறு செய்து ஒரு தட்டில் வைக்கவும். ஒவ்வொரு பிரட் துண்டின் மேலும் சிறிது வெங்காய கலவையை வைக்கவும். கடைசியாக அதன் மேல் கொத்தமல்லி தழை, சாட் மசாலாவை தூவி பரிமாறவும். சுவையான, சத்தான மசாலா பிரெஞ்ச் டோஸ்ட் ரெடி.

அத்திக்காய் கிரேவி

தேவையான பொருட்கள்:பொடியாக அரிந்த அத்திக்காய் – 1 கப், வெங்காயம், தக்காளி – தலா 1, இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன், எண்ணெய் – தேவைக்கேற்ப, கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

அரைத்த கசகசா – 1 டீஸ்பூன் (வெறும் கடாயில் வறுத்து வைக்கவும்), தனியா – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன், பூண்டு – 5 பல், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, ஆய்ந்த கொத்தமல்லித்தழை – 1 கட்டு.

எப்படிச் செய்வது?கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரிந்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அத்திக்காயைப் போட்டு வதக்கவும். காய் வெந்ததும் அரைக்க கொடுத்த பொருட்களை விழுதாக அரைத்துச் சேர்க்கவும். நன்கு வதக்கி, தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக கடலை மாவை கரைத்து இந்த கிரேவியில் ஊற்றவும். கிரேவி திக்காகவும், தனி சுவையுடனும் இருக்கும்.

நார்த்தங்காய் குழம்பு

தேவையான பொருள்கள்: பொடியாக நறுக்கிய நார்த்தங்காய் – 1 கப், புளி – சிறிதளவு, மஞ்சள் தூள் – சிறிது, எள் – 1 டீஸ்பூன், வெல்லம் – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிக்கத் தேவையானவை : கடுகு, கடலைப் பருப்பு, தனியா, வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3

செய்முறை: புளியை ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விடாமல், எள்ளை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். நறுக்கிய நார்த்தங்காயை நீரில் சற்றே வேகவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். நல்லெண்ணெயை சூடாக்கி, கடுகு, கடலைப் பருப்பு, தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.

பின்னர், வேக வைத்த நார்த்தங்காயை அதில் சேர்த்து வதக்கிய பின் புளிக்கரைசலை ஊற்றவும். உப்பு, மஞ்சள் தூள், எள்ளுப் பொடி சேர்த்து கொதிக்க விடவும். இறக்கும்போது வெல்லம் சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைத்துவிடவும். ஜீரண சக்திக்கு நார்த்தங்காய் அருமருந்து. புகையிலைப் பழக்கம் உள்ளவர்களின் உடலில் சேரும் நஞ்சையும் முறித்துவிடும் சக்தி கொண்டது நார்த்தங்காய்.

பார்லி – உணவே மருந்து

பார்லியைப் பொதுவாக உடல்நிலை சரியில்லாதபோது கஞ்சி காய்ச்சி குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவோம். அது நிறைய பேருக்குப் பிடிக்காது. இதோ சுவையான பார்லி கஞ்சி தயாரிக்கும் முறை.

பார்லி சத்து கஞ்சிக்கு தேவையானவை: கொள்ளு – அரை கப்,பார்லி – கால் கப்
சீரகத்தூள் – 1 சிட்டிகை, மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை :கொள்ளு, பார்லியை கடாயில் நன்றாக வறுத்து மிக்சியில் பொடித்து கொள்ளவும்.
குக்கரில் பொடித்த மாவை போட்டு 5 விசில் வைத்து எடுக்கவும். இந்த கலவையில் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கஞ்சி காய்ச்சவும்.
இதை தினமும் பருகுவதால் உடல் உறுதி பெறும். கெட்ட நீர் முழுவதும் வெளியேறும், ஊளைச் சதை கரையும், உடல் சிக்கென்று கட்டுக் கோப்பாய் இருக்கும்.

மற்றொரு முறை: பார்லி – 1 கப் (மிக்சியில் உடைத்துக்கொள்ளவும்)
பெரிய வெங்காயம் – 1, கேரட் – 1 , ப.மிளகாய் – 3 , இஞ்சி – 1 துண்டு , எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி , கறிவேப்பிலை – சிறிதளவு , தண்ணீர் – 3 கப்,உப்பு – தேவையான அளவு.

செய்முறை : கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் வெங்காயம், மிளகாய், இஞ்சி மற்றும் உடைத்த பார்லியை போட்டு நன்கு வதக்கி, உப்பு கலந்து 3 கப் நீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பார்லி வேக சிறிது நேரமாகும். நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறலாம். இவை அத்தனையையும் குக்கரில் போட்டும் தேவையான விசில் விட்டு, வேக வைத்தும் சாப்பிடலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close