How to cook Idly perfectly Tips Tamil news : பஞ்சு போன்ற இட்லிக்கு, காட்டன் துணி பயன்பாடு அவசியம். என்றாலும் சிலர் துணியில் இட்லி ஒட்டிக்கொள்கிறது என்பதனால், தட்டில் எண்ணெய் தேய்த்து உபயோகிக்கும் முறையைப் பின்பற்றுகின்றனர். ஆனால், அந்த முறையில் இட்லி மென்மையாக எல்லா நேரங்களிலும் வராது. துணி போட்டு இட்லி எடுப்பவர்களுக்குச் சிறிதும் ஒட்டாமல் இட்லியை எப்படி எடுப்பது என்பதை இங்கே பார்க்கலாம்..
இட்லி சுடுவதற்கு என்று சுத்தமான காட்டன் துணியைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. அதற்கு, ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் வேஷ்டி உங்கள் சாய்ஸ் என்றால், அதனை இனி பின்பற்றாதீர்கள். ஏனெனில், அது தூய்மையான காட்டன் துணி அல்ல. அதில் பாலிஸ்டர் கலந்திருக்கும். சுத்தமான காட்டன் துணி பயன்படுத்தவில்லை என்றால், நிச்சயம் இட்லி ஒட்டிக்கொள்ளும். எனவே, துணியின் தேர்வு நேரத்தில் அதிக கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இட்லி துணியைக் கண்டிப்பாக நேரம் கிடைக்கும் பொழுது வெயிலில் உலர்த்தி எடுக்கவேண்டும். இதனால், இட்லி துணியில் இருக்கும் நுண்கிருமிகள் அழியும்.
ஒவ்வொரு முறை இட்லி சுடும்போதும் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் சூடேறியதும், வைத்திருக்கும் காட்டன் துணியைத் தண்ணீரில் நனைத்து பிறகு பயன்படுத்தலாம். மேலும், இட்லிக்கு ஊற்றும் மாவில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கலக்கி விட்ட பிறகு இட்லி தட்டில் ஊற்றி அவிய விடலாம். இப்படிச் செய்தால் நிச்சயம் இட்லி ஒட்டாமல் வரும்.
இட்லி மாவு அரைக்கும்போது ஒரு டேபிள்ஸ்பூன் ஊற வைத்த ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக இருக்கும், துணியில் ஒட்டாது. அதேபோல, இட்லி தட்டிலிருந்து இட்லியை எடுக்கும் முன்பு சிறிதளவு சுத்தமான தண்ணீரைத் தெளித்து எடுக்கலாம். உடனடியாக எடுக்கவேண்டும் என்று நினைத்தால், இட்லி தட்டை பின்புறமாகத் தண்ணீர் குழாயில் தண்ணீரைத் திறந்து விட்டுக் காண்பித்து பிறகு இட்லியை எடுக்கலாம்.
இட்லிக்கு மாவு அரைக்கும்போது அதன் பக்குவம் முக்கியம். நான்கு பங்கு இட்லி அரிசிக்கு, ஒரு பங்கு உளுந்து சேர்த்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி, ஒரு தேக்கரண்டி வெள்ளை அவல் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து அரைத்தால் இட்லி மிகவும் மென்மையாக வரும். அதேபோல துணியில் ஒட்டாமலும் இருக்கும்.
அதேபோல இட்லி அவிக்கும் நேரமும் மிகவும் முக்கியம். பத்து நிமிடத்திற்கு மேல் இட்லியை அவிக்க வேண்டிய அவசியமில்லை. அது தான் இட்லியின் சரியான பதம். இப்படிச் செய்தால் நிச்சயம் துணியில் இட்லி ஒட்டாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil