/indian-express-tamil/media/media_files/2025/10/12/chetrupun-2025-10-12-13-17-24.jpg)
மழைக்காலத்தில் நம் கால் விரல்களில் சரும பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த சரும பிரச்சனையை சேற்றுப் புண் என்று கூறுவார்கள். இந்த சேற்றுப்புண் வந்துவிட்டால் நம் கால்களில் உள்ள தோல்கள் வெடித்து புண்கள் ஏற்படுகிறது. அதாவது, சாலையில் தேங்கிக் கிடக்கும் மழை நீருடன் சேறு, கழிவு நீர் கலந்திருக்கும். இந்த நீரில் நாம் நடக்கும் பொழுது நமது கால்களை பாக்டீரியா மற்றும் பங்கஸ் கிருமிகள் பாதித்து சேற்றுப்புண் ஏற்படுகிறது.
இந்த சேற்றுப்புண்ணை கவனிக்காமல் விட்டால் அவை பரவி மற்ற விரல் இடுக்கில் வரக்கூடும். இதனால் படிப்படியாக தொந்தரவு அதிகமாகிவிடும். மேலும் காலணிக்கூட அணிய முடியாமல் போகலாம், வலியால் நடப்பதற்கே சிரமமாகிவிடும். சேறுகளில் நடப்பது மட்டுமல்லாமல் ஷூ அணிவதால் வரும் வியர்வையாலும் சேற்றுப்புண் தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நாம் வீட்டில் அதிக நேரம் ஈரமான பகுதிகளில் நின்றாலோ, துணி துவைக்கும் போது அந்த நீரில் நிற்பதாலும் சேற்றுப்புண் வரும். இந்த சேற்றுப் புண்ணை விரைவில் எப்படி சரிசெய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வேப்பிலை
வேப்பிலைக்கு சரும பிரச்னைகளை போக்கும் தன்மை உள்ளது. அதனால் வேப்பிலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். அதேபோல் வேப்ப எண்ணெய்யை காய்ச்சி இளம் சூட்டில் சேற்றுப்புண் இருக்கும் பகுதியில் தொடர்ந்து தடவிவர குணமாகும்.
மஞ்சள்
மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் சேர்த்து, குளிப்பதற்கு முன்பு, காலில் தடவிக் குளிக்க வேண்டும். இதனால் தண்ணீர் அந்த புண்ணில் படாது. மேலும் சேற்றுப்புண் விரைவில் மறையும். மேலும் மஞ்சளுடன் கீழாநெல்லி இலையை சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் சில நாட்கள் தடவிவர புண் விரைவில் குணமாகும்.
உப்பு நீர்
உப்பிற்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் எடுத்து கொள்ள வேண்டும். அதில் கொஞ்கம் உப்பு சேர்த்து, அதில் கால்களை 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின் கால்களை சுத்தமான துணியால் துடைத்து, வேப்ப எண்ணெய், அல்லது மஞ்சள், தேங்காய் எண்ணெய் மிக்ஸை வைக்கலாம்.
வாஸ்லின்
நாம் உதட்டிற்கு போடும் வாஸ்லினை சேற்றுப்புண் ஏற்பட்ட இடத்தில் போட்டால் அவை பாதிக்கப்பட்ட தோல்களை நீக்கி சேற்றுப்புண்ணை விரைவில் குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேற்சொன்ன வீட்டு வைத்தியத்தை ஒரு வாரம் சேற்றுப்புண் இருக்கும் இடத்தில் பயன்படுத்தி வந்தால் புண் விரைவில் ஆறிவிடும். இல்லையென்றால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.