/indian-express-tamil/media/media_files/2025/06/09/v7n8IaDsqwDhZJRHTeGT.jpg)
நீங்க தூரத்தில் வரும்போதே உங்க உடல் மண மணக்கும்… வீட்டிலே இப்படி நலங்கு மாவு செய்து யூஸ் பண்ணுங்க!
வியர்வை துர்நாற்றம் நமக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இதனால் பொது இடங்களுக்கு செல்ல கூச்சமாக இருக்கும். இதனை போக்க வாசனை திரவங்கள், பவுடர்கள் என பலவற்றை முயற்சி செய்திருப்பீர்கள். ஆனால் இதற்கு நலங்கு மாவு நல்ல தேர்வாக இருக்கும். இதில் உள்ள மூலிலை பொருட்கள் நறுமணத்தை ஏற்படுத்தும். மேலும் இது உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். பிறந்த குழந்தைகளுக்கும் நலங்கு மாவு பயன்படுத்தலாம். இது அவர்களின் சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் அவர்களை வாசனையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
நலங்கு மாவைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது முகப் பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து போகும். அடுத்ததாக வியர்வை துர்நாற்றம் பெரும்பான்மையோரின் பிரச்னையாக உள்ளது. நிறைய பேர் செயற்கை வாசனைப் பொருட்களை (டியோடரண்ட்) உபயோகிக்கின்றனர். நலங்குமாவினைப் பயன்படுத்தி வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம். இதனை உபயோகிப்பதால் எவ்வித பக்க விளைவும் ஏற்படுவதில்லை.
தேவையான பொருட்கள்:
- காய்ந்த ரோஜா இதழ்கள் (பன்னீர் ரோஜா): நறுமணத்திற்காகவும், சருமத்தை மென்மையாக்கும் டோனராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
- கஸ்தூரி மஞ்சள்: கிருமிநாசினி பண்புகளுக்காக அறியப்படுகிறது. இது வியர்வையைக் கட்டுப்படுத்தி, துர்நாற்றத்தை நீக்கி, அக்குள் போன்ற பகுதிகளில் சருமத் தொற்றுகள் வராமல் தடுக்கிறது.
- வெட்டிவேர்: இது குளியல் பொடிக்கு இனிமையான நறுமணத்தை அளிக்கிறது.
- விரலி மஞ்சள்: இதுவும் கஸ்தூரி மஞ்சளைப் போலவே, கிருமிநாசினி குணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
- கோரைக்கிழங்கு: இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற இயற்கையான ஸ்க்ரப்பாக செயல்படுகிறது.
- கார்போக அரிசி: இதுவும் சருமத்தை ஸ்க்ரப் செய்யப் பயன்படுகிறது.
- முல்தானி மட்டி: இது குளிர்ச்சித் தன்மையை அளிக்க சேர்க்கப்படுகிறது.
- கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, பூலாங்கிழங்கு, ஆவாரம் பூ, மற்றும் பூந்திக்கொட்டை: இவை கூடுதல் நறுமணத்திற்காகவும், கிருமிநாசினி பண்புகளுக்காகவும் சேர்க்கலாம்.
செய்முறை:
முதலில், தேவையான பொருட்கள் அனைத்தையும் (காய்ந்த ரோஜா இதழ்கள், கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், விரலி மஞ்சள், கோரைக்கிழங்கு, கார்போக அரிசி) சம அளவில் எடுத்துக் கொள்ளவும். உதாரணமாக, ஒவ்வொரு பொருளிலும் 50 கிராம் எடுத்துக் கொள்ளலாம். இதனை நன்றாக வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்த பிறகு, அவற்றை மாவு மில்லில் கொடுத்து நைசாக அரைத்து பொடியாக்கி கொள்ளவும். அரைத்த பொடியின் அளவிற்கு ஏற்ப (உதாரணமாக, 300 கிராம் பொடி இருந்தால்) மீதமுள்ள 200 கிராமுக்கு முல்தானி மிட்டி அல்லது கடலை மாவு அல்லது பாசிப்பயறு மாவைச் சேர்த்துக் கொள்ளலாம். இந்த நலங்கு மாவை உடல் முழுவதும் தேய்த்து, பின்னர் தண்ணீரில் கழுவவும்.
பயன்படுத்தும் முறை:
குளிப்பதற்கு முன், உடல் முழுவதும் எண்ணெய் தடவிக் கொள்ளவும். பின்பு, குளியல் பொடியை சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல ஆக்கி, உடல் முழுவதும் மெதுவாக தேய்க்கவும். இந்த பொடியை முகத்தில் பயன்படுத்தக்கூடாது. கழுத்தில் இருந்து உடல் முழுவதும் பயன்படுத்தலாம். வாரத்திற்கு ஒரு முறையாவது பயன்படுத்துவது நல்லது. இது பெண்களின் கழுத்து, அக்குள் மற்றும் பிற மடிப்புகளில் ஏற்படும் தொற்றுகளைத் தடுக்கவும், உடலை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.