/indian-express-tamil/media/media_files/2025/04/26/fTI78S4u7opWeBF9rvAW.jpg)
கோடை காலத்தின் தாக்கம் அனைத்து பகுதிகளில் அதிகரித்துக் காணப்படுகிறது. வாட்டி வதைக்கும் வெயிலில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அனைவரும் சாப்பிட வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எனினும், கோடை காலத்தில் கிடைக்கும் நன்மைகளில் ஒன்றாக மாம்பழம் விளங்குகிறது. இந்த சீசனில் தான் மாம்பழத்தின் வரத்து அதிகரித்துக் காணப்படும். குறிப்பாக, அதன் சுவைக்காகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். ஆனால், இயற்கையான மாம்பழங்களை சாப்பிடும் போது மட்டுமே நம்முடைய ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்கும்.
இன்றைய சூழலில் வணிக நோக்கத்துடன் கால்சியம் கார்பைடைப் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தி மாம்பழங்களை சீக்கிரமாகவே பழுக்க வைக்கின்றனர். இவ்வாறு இரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இது போன்ற இரசாயனங்களை உணவு பொருட்களில் பயன்படுத்துவதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இதில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸின் போன்ற தீங்கு விளைவுக்கும் தன்மைகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள இயற்கையான முறையில் பழுத்த மாம்பழத்தை வாங்கி பயன்படுத்தலாம்.
நாம் வாங்கும் மாம்பழத்தில் இரசாயனம் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து துல்லியமாக கண்டறிய வேண்டுமானால் ஆய்வகங்களுக்கு தான் செல்ல வேண்டும். ஆனால், பழத்தில் தெரியும் மாற்றங்களை வைத்து நம்மால் இதனை ஓரளவிற்கு கண்டு பிடிக்க முடியும். அந்த வகையில் மாம்பழத்தின் மேற்பகுதி முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரு சில இடங்களில் மட்டும் கருப்பு புள்ளிகள் இருந்தால், அத்தகைய மாம்பழம் வாங்குவதை தவிர்த்து விடலாம்.
இதேபோல், மாம்பழத்தை அழுத்திக் பிடித்து பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது மாம்பழம் உறுதியாக இருந்தால், இயற்கையான முறையில் பழுத்த மாம்பழம் எனக் கருதலாம். அழுத்தம் கொடுக்கும் போது மாம்பழம் மென்மையாக இருந்தால், அது இரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கபப்ட்டதாக இருக்கக் கூடும்.
இது தவிர மற்றொரு பரிசோதனையையும் செய்யலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் மாம்பழத்தை போட வேண்டும். அப்போது, மாம்பழம் தண்ணீரில் மூழ்கினால் அது இயற்கையானதாக இருக்கும். ஏனெனில், இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட மாம்பழம் தண்ணீரில் மூழ்காமல் மிதக்கும். எனவே, நாம் வாங்கும் மாம்பழம் ஆரோக்கிமானதா என்று கண்டறிந்து சாப்பிடுவது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.