மாடித்தோட்டம் அமைக்க திட்டமா? ரூ. 450-க்கு தமிழக அரசு கிட்; உள்ளே என்னென்ன இருக்கு பாருங்க!
மாடித் தோட்டம் அமைப்பதற்கு என தமிழக அரசு சார்பில் பிரத்தியேகமாக சில பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த தொகுப்பில் இருக்கக் கூடிய பொருட்கள் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
நம் வீட்டில் இருக்கும் இடத்தில் குறைந்த அளவிலாவது ஒரு மாடித் தோட்டம் அமைக்க வேண்டும் என பலருக்கும் ஆசையாக இருக்கும். ஆனால், மாடித் தோட்டம் அமைப்பதற்கு தேவையான பொருட்கள் என்ன? அவை அனைத்தையும் ஒரே இடத்தில் எப்படி வாங்குவது? என்ற குழப்பம் சிலருக்கு இருக்கும்.
Advertisment
அந்த வகையில் தமிழக அரசு சார்பில் மாடித் தோட்டம் அமைப்பதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது. நமது ஆதார் அட்டை மூலமாக இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு ஆதார் அட்டைக்கு இரண்டு தொகுப்புகள் வழங்கப்படும். இதன் ஒரு தொகுப்பின் விலை ரூ. 450 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Government terrace garden kit என்ற இணையதளம் வாயிலாக இதற்கு பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு அரசு தோட்டக் கலை மற்றும் மலை பயிர்கள் துறை அலுவலகத்திலும் இந்த தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது. அங்கு சென்றும் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். இதை வாங்க செல்லும் போது ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த தொகுப்பில் டிரைக்கோடெர்மாவிரிடி, அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா உள்ளிட்டவை வழங்கப்படுகிறன. மேலும், வேப்ப எண்ணெய்யும் இவற்றுடன் வழங்கப்படுகிறது. செடிகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள விளக்க கையேடும் இந்த தொகுப்புடன் சேர்த்து விநியோகம் செய்யப்படுகிறது.
Advertisment
Advertisements
இவை தவிர செடிகளை வளர்ப்பதற்கு 6 பைகளும் கொடுக்கப்படுகிறது. மேலும், செடி வளர்ப்புக்கு முக்கியமான தென்னை நார்களும் இதில் கிடைக்கிறது. அதன்படி, 12 கிலோ அளவிற்கு தென்னை நார்கள் இத்தொகுப்புடன் கொடுக்கப்படுகிறது. பயிரிட்டு வளர்ப்பதற்காக தக்காளி, கத்திரி, கொத்தவரங்காய், தண்டுக் கீரை மற்றும் பாலக்கீரை ஆகிய விதைகளும் சேர்த்து தருகின்றனர்.
எனவே, மாடித் தோட்டம் பராமரிக்க வேண்டும் என்று விருப்பப்படுபவர்கள், அரசு சார்பில் வழங்கப்படும் இந்த தொகுப்பை பெற்று பயனடையலாம்.