உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். அதன்படி, பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தி வதந்தி என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதில், திருப்பதி தரிசன டிக்கெட்டை பெறுவதில் பக்தர்களுக்கு சிரமம் இருந்து வருகிறது. தேவஸ்தானத்தை பொறுத்தவரை, ஆன்லைனில் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டுமென்றால், மூன்று மாதங்களுக்கு முன்னதாக தேவஸ்தானம் அறிவிக்கும் நாளில் மட்டுமே செய்ய முடியும். அன்றைய தினம் ஏராளமானோர் இதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பதால், இணையதளம் சில நேரங்களில் செயல்படாமல் போவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு ஆன்லைனில் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்ய இயலாதவர்கள், எஸ்.எஸ்.டி டோக்கன் அல்லது தரிசன வரிசையில் சென்று மட்டுமே தரிசிக்க முடியும் என்ற நிலை நீடித்தது. இந்த சூழலில் தான் பக்தர்களின் வசதிக்கேற்ப தரிசன டிக்கெட் பெறும் முறையை எளிதாக்கும் விதமாக ஆந்திர மாநில அரசு ஒரு முன்னெடுப்பை மேற்கொள்கிறது.
அந்த வகையில், 'மன மித்ரா' என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாட்ஸ் ஆப்பில் திருப்பதி தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், துர்காமல்லேஸ்வர சுவாமி கோயில், ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, சிம்ஹாசலம், அன்னவரம், துவாரகா திருமலை போன்ற இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களின் சேவைகளையும் வாட்ஸ் ஆப்பில் இணைக்க ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவியது. ஆனால், இந்த செய்தி வதந்தி என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.