ஆஸ்திரேலியாவில் நடந்த கோரச் சம்பவம், விஷக் காளான்களின் அபாயத்தையும், அவற்றைப் பற்றிய விழிப்புணர்வின் அவசியத்தையும் இந்தியாவிற்கு உரக்க சொல்கிறது. எரின் பேட்டர்சன் என்ற ஆஸ்திரேலிய பெண், வீட்டிலேயே சமைத்த உணவில் கொடிய விஷக் காளான்களை கலந்து தனது குடும்ப உறுப்பினர்கள் மூவரின் உயிரிழப்புக்கும், ஒருவரை கொலை செய்ய முயன்றதற்கும் காரணமாக கண்டறியப்பட்டுள்ளார். அவர் பரிமாறிய மாட்டிறைச்சி உணவில் "டெத் கேப்" (Death Cap - Amanita phalloides) எனப்படும் உலகின் மிகக் கொடிய காளான் வகை இருந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம், வனப்பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் (அ) உள்ளூர் சந்தைகளில் கிடைக்கும் காளான்களைப் பற்றிய நமது அணுகுமுறையில் கடுமையான மறுபரிசீலனை தேவை என்பதை உணர்த்துகிறது.
ஆஸ்திரேலியா மட்டுமல்ல, இந்தியாவிலும் விஷக் காளான் தாக்குதல்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. உதாரணமாக, கடந்த மே மாதம் மேகாலயாவின் கிழக்கு ஜெயின்ஷியா மலைப்பகுதிகளில், விஷக் காளான்களை உட்கொண்டதால் ஆறு பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது, விஷக் காளான்கள், குறிப்பாக மழைக்காலங்களில், எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கான நேரடி சான்றாகும்.
பிரச்சனை என்னவென்றால், விஷக் காளான்கள், உண்ணக்கூடிய காளான்களைப் போலவே நிறம், வடிவம், ஏன் மணத்திலும் கூட ஒத்திருக்கின்றன. "குடை வடிவ காளான்கள்" அல்லது "சின்ன பழுப்பு காளான்கள்" போன்றவற்றை விஷமற்றவை என்று தவறாக நினைத்து உட்கொண்டால், அவை மரணப் பொறிகளாக அமையலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது காளான்களைச் சமைப்பது அனைத்து நச்சுக்களையும் நீக்குவதில்லை என சுகாதார அதிகாரிகள் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றனர்.
காளான் விஷத்தின் அறிகுறிகள் குமட்டல், வயிற்றுப்போக்கு முதல் மயக்கம், குழப்பம், கல்லீரல் (அ) சிறுநீரகம் செயலிழப்பு வரை மாறுபடும். "டெத் கேப்" போன்ற கொடிய வகைகளில், அறிகுறிகள் உடனடியாகத் தெரிவதில்லை. நச்சுகள் உறுப்புகளுக்குள் தீவிர பாதிப்பை ஏற்படுத்திய பின்னரே சில மணிநேரம் அல்லது ஒரு நாள் கழித்து வெளிப்படலாம். இதனால் உடனடி சிகிச்சைக்கான பொன்னான நேரம் வீணாகிறது.
காளான் நச்சுத்தன்மையை எவ்வாறு தவிர்ப்பது?
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை. அறியாத காளான்களை ஒருபோதும் சாப்பிடாதீர்கள். காட்டில் இருந்து அல்லது அறியப்படாத பகுதிகளில் இருந்து காளான்களை சேகரிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். காளான்களை நம்பகமான, சுத்தமான கடைகளிலிருந்து மட்டுமே வாங்குங்கள். சுகாதாரமற்றதாகத் தோன்றும் (அ) கெட்டுப்போன காளான்களை தவிர்க்கவும். சமைப்பதற்கு முன் காளான்களை சரியாகக் கழுவி சுத்தம் செய்யுங்கள். விஷத்தன்மையின் அறிகுறிகள் (குமட்டல், வயிற்றுப் போக்கு, மயக்கம்) தோன்றினால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
விஷக் காளான் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
காலதாமதமின்றி உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். காளான் விஷத்திற்கு உலகளாவிய மாற்று மருந்து எதுவும் இல்லை. பாதிக்கப்பட்டவரின் நிலையைப் பொறுத்து, நரம்புவழி மருந்துகள், மயக்க மருந்துகள் அல்லது இரத்தம் நச்சுத்தன்மையடைந்திருந்தால் டயாலிசிஸ் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படலாம். சிகிச்சையின் நேரம் மிக முக்கியம். பயிற்சி பெற்ற காளான் வல்லுநர் (mycologist) இல்லாவிட்டால், காடுகளில் காளான் சேகரிக்கும் சாகசங்களைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். அதற்குப் பதிலாக, சூப்பர் மார்க்கெட் அலமாரிகளில் கிடைக்கும் பாதுகாப்பான காளான்களுடன் ஒட்டிக்கொள்வது பாதுகாப்பானது. காளான் குறித்த விழிப்புணர்வும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் உயிரிழப்புகளைத் தவிர்க்க உதவும்.