Low-calorie Indian chutney recipes to eat to burn belly fat: ’உடம்ப குறைக்கணும், அதே சமயம் அது ஈஸியா இருக்கணும்’ இப்படி சொல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சொல்லி வைத்தாற்போல் அனைவருக்கும் ’நச்’ என ’சிம்ரன்’ போல் இருக்க ஆசை தான். அதற்காக தீவிரமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மை தூங்க விடாமல் செய்தாலும், என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகளும் நம்மை தினம் துளைத்தெடுக்கும். இதே மனநிலையில் நீங்களும் இருந்தால், இனி ‘டோன்ட் வொர்ரி..’ இந்த கட்டுரை உங்களுக்குத்தான்.
நம் ஊரில் பெரும்பாலும், இட்லி, தோசை, சப்பாத்தி வகைகள் தான் சிற்றுண்டி பட்டியலில் முன்னணி இடம் பிடித்திருக்கின்றன. இவைகளுக்கு சைட் டிஷ்ஷாக நாம் சாப்பிடும் சட்னியிலேயே உடல் எடையைக் குறைக்கலாம். காய்கறிகள், மூலிகைகள், மிளகு, சீரகம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வித விதமான சட்னிகள் குறைந்த கலோரிகளைக் கொண்டிருப்பதால், உடல் எடையையும் அடி வயிற்று சதையையும் கனிசமாகக் குறைக்கின்றன. அவற்றை இங்கே பட்டியலிடுகிறோம். முயற்சி செய்து பாருங்கள்.
பூண்டு - மிளகாய்
காய்ந்த மிளகாய், பூண்டுடன் சிறிது வினிகர் மற்றும் உப்பு சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். மிளகாயும் பூண்டும் கொழுப்பை எரிப்பதில் அதிக பங்கு வகிக்கின்றன. இதனை சாலட் மற்றும் சாண்ட்விச்சிலும் சேர்த்து சாப்பிடலாம்.
சால்சா
தக்காளியை வாட்டி தோல் நீக்கிக் கொள்ளுங்கள். அதோடு நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அப்படியே இட்லி, தோசை, சாண்ட்விச்சுடன் சாப்பிடுங்கள்.
நெல்லிக்காய் - மிளகாய்
நெல்லிக்காயை வேக வைத்து கொட்டையை நீக்கிக் கொள்ளுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சிறிது மஞ்சள் சேர்த்து அதோடு பச்சை மிளகாயை கீறி போட்டு, ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு நெல்லிக்காய் மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் வேக விடவும். ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைக்கும் சைட் டிஷ் தயார்!
வெந்தயம்
வெந்தயம் மற்றும் ஆம்ச்சூர் பவுடரை 5-6 மணி நேரம் ஊற வைத்து, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 10-15 நிமிடம் குக்கரில் வேக விடுங்கள். பிறகு காய்ந்த மிளகாய் தாளித்து விடுங்கள். இதனை ஸ்நாக்ஸ், கிரேவி, சைட் டிஷ் என எல்லா வகையிலும் சாப்பிடலாம்.
தக்காளி பூண்டு
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து பூண்டு கிராம்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
நாம் அன்றாடம் சாப்பிடும் சட்னி வகைகளிலிருந்து சற்று மாறுபட்டிருக்கும் இவைகள், உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன் தேவையற்ற கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. அதனால் இவற்றை உங்கள் உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முன்னேறுங்கள்!