வாழை மரத்தைப் போல மனிதனை வாழ வைக்கும் தாவரம் வேறில்லை என்று கூறுவார்கள். வாழையின் எல்லா பகுதிகளும் மனிதனுக்கு பயன்படுகின்றன.
வாழை இலையில் உணவு சாப்பிடலாம், வாழைக்காய் சமைத்து சாப்பிடலாம், வாழைப் பழம் சாப்பிடலாம், வாழைத் தண்டும் சமைத்து சாப்பிடலாம், வாழை நார் பூக்கள் கட்டுவதற்கு பயன்படுகிறது. இந்த வரிசையில், இப்போது வாழைப் பழத் தோலையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வாழைப்பழத் தோலை தூக்கி வீசாமல், இனிமேல் இப்படி உங்கள் வீட்டு செடிகளுக்கு உரமாக தயார் பண்ணுங்கள்.
வாழைப்பழத் தோலை உங்கள் வீட்டு செடிகளுக்கு உரமாக எப்படி தயாரிப்பது என்று நாங்கள் இங்கே உங்களுக்கு கூறுகிறோம். செடிகளுக்கு உரமாகக் கொடுக்கும் அளவுக்கு வாழைப்பழத்தோலில் அப்படி என்ன சத்து இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இதோ உங்களுக்காக, வாழைப்பழத் தோலில், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளது. இதை குப்பையில் தூக்கி வீசாமல் செடிகளுக்கு உரமாக மாற்றிக் கொடுத்தால் செடிகள் நன்றாக வளர்கின்றன.
வாழைப்பழத் தோலை செடிகளுக்கு உரமாக தயாரிப்பது எப்படி?
உங்கள் வீடுகளில் ஒரு லிட்டர் குளிர்பான பிளாஸ்டிக் காலி கேன் இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். அதை மேல் பகுதிக்கு கீழே துண்டாக வெட்டுங்கள், மூடியில் துளை போங்கள். இப்போது மேல் பகுதி ஒரு புனல் போல இருக்க வேண்டும். அடுத்து, வாழைப் பழத்தோலை முதலில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். அவற்றை நாம் வெட்டி வைத்துள்ள பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு அதில் நிரம்ப தண்ணீர் ஊற்றுங்கள். அதை ஒரு 3 நாளுக்கு மூடி வையுங்கள். 3 நாட்களுக்கு பிறகு பார்த்தால் தண்ணீர் கருப்பாக மாறியிருக்கும். இப்போது இந்த தண்ணீரை நாம் ஏற்கெனவே பிளாஸ்டிக் கேனில் வெட்டி வைத்துள்ள புனல் மூலம் வேறு ஒரு பிளாஸ்டிக் கப்பில் வைத்து இந்த தண்ணீரை ஊற்றி வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை அப்படியே உங்கள் வீடுகளில் உள்ள செடிகளுக்கு ஊற்றலாம். அப்படி செய்யும்போது, அந்த செடிகள் நன்றாக வளர்வதோடு விரைவாக பூக்கவும் காய்க்கவும் செய்யும். செலவில்லாமல் வாழப்பழத்தோலை உங்கள் வீட்டு செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். வாழைப்பழத் தோலை தூக்கி வீசாமல், இனிமேல் இப்படி உங்கள் வீட்டு செடிகளுக்கு உரமாக தயார் பண்ணுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“