பெரும்பாலும் காலையில் எல்லோரும் சாப்பிடுவது இட்லி தோசைதான். ஆனால் தினமும் இந்த இட்லி தோசையை சாப்பிடுவதற்கு நமக்கு கிடைக்க கூடிய சைடிஷ் தேங்காய் சட்னி, காரச் சட்னி அல்லது சாம்பார் தான்.
தினமும் சாம்பார் வைப்பது கடினம். அதனால் பெரும்பாலும் சட்னி வகைகள் தான் கிடைக்கும். தினமும் ஒரே மாதிரியான சட்னிகளை சாப்பிட நமக்கு வெறுப்பாக இருக்கும். இதற்கு நல்ல தீர்வாக, ஒரு எளிய சட்னி இருக்கிறது. அந்த சட்னி தயிர் சட்னி. வீட்டில் இருக்கும் தயிரைக் கொண்டு எளிய முறையில் விரைவாகவும் சுவையாகவும் இந்த சட்னியை செய்யலாம். வாருங்கள் தயிர் சட்னி எப்படி வைப்பது என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தயிர் - 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஃப்ரஷான கெட்டி தயிரை எடுத்து, அதை நன்கு கட்டிகள் இல்லாமல் அடித்துக்கொள்ளுங்கள்.
பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காயவிடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு நன்றாக பொறிந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்ததாக நறுக்கி வைத்த வெங்காயத்தை இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வெந்ததும், கரைத்து வைத்துள்ள தயிரை இதில் ஊற்றி உடனே கிளற வேண்டும்.
பின் தயிர் இருந்த பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சுற்றிலும் ஒட்டியிருக்கும் தயிரை வழித்துவிட்டு கடாயில் ஊற்றுங்கள்.
அடுத்ததாக இதனை நன்றாக மூடி வைத்து 10 நிமிடங்களுக்குக் கொதிக்க விடுங்கள். கொதித்ததும் மூடியை திறந்து பார்க்க தயிர் கெட்டியாகி இருக்கும்.
அதை மேலும் கிளறிக்கொண்டே இருந்தால் தண்ணீர் இறுகி கெட்டியாக வரும். பின் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
இப்போது எளிமையான சுவையான தயிர் சட்னி ரெடி!
."தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil