நம்முடைய அன்றாட உணவில் தவறாமல் தயிரும் இடம்பெறும். பாலில் இருந்து பெறப்படும் தயிரில் பாலை காட்டிலும் அதிக அளவு புரதச்சத்து நிறைந்திருக்கிறது. பல சத்துக்களை தன்னுள் கொண்டிருக்கும் தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு தரும் நன்மைகள் அதிகமானது. தயிர் குளிர்ச்சியானது என்று சிலரும், தயிரை சாப்பிட்டால் உஷ்ணம் என்றும் சிலர் சொல்வதுண்டு.
ஆனால், வெப்பநிலை அதிகரிக்கும்போது உடல் வெப்பத்தை வெல்ல சிறந்த வழியாக, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த உணவுப்பொருளான தயிரே உதவுகிறது. அது உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது. குறிப்பாக குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் பலர் வீட்டில் தயிர் செய்வதில் சிரமப்படுகிறார்கள் ஏனென்றால் பாலில் தயாரிக்கப்படும் தயிர் சில நேரங்களில் சரியான தயிராக மாறாது அல்லது அதிக தண்ணியாக இருக்கும். எனவே நீங்கள் தயிர் தயாரிப்பதில் சிரமப்பட்டிருந்தால் இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்
பால் - ஒரு லிட்டர் (பசும்பால் நல்லது)
உறை தயிர் – ஒரு டீஸ்பூன்
செய்முறை
பாலை நன்கு கொதிக்க வைத்து, பின் கெட்டியாகும் வரை குறைந்த வெப்பத்தில் அடுப்பில் வைத்திருக்கவும்.
பின் அதை மெதுவாக ஆற வைக்கவும்.
இப்போது பால் நுரை வரும் வரை கலக்கவும். ஒரு பாத்திரத்தில் இருந்து மற்றொரு பாத்திரத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை மாற்றுவதன் மூலம் இதைச் செய்யலாம்.
பின்னர் உறை தயிரை அதில் சேர்த்து ஒருமுறை அல்லது இரண்டு முறை கலக்கவும் வைக்கவும்.
பின்னர் ஏதேனும் ஒரு பாத்திரத்தில் (மண் பாத்திரம் சிறந்தது) ஊற்றி ஐந்து முதல் எட்டு மணி நேரம் அல்லது ஒரே இரவு முழுவதும் மூடி வைக்கவும். நம்முடைய காலநிலை எவ்வளவு வெப்பமாக அல்லது குளிராக இருக்கிறது என்பதைப் பொறுத்து தயிராக மாறும்.
தயிராக மாறிய பின் குளிரூட்டவும்.
சிறந்த தயிர் செய்ய டிப்ஸ்
கெட்டியான தயிர் பெற நல்ல பாலை பயன்படுத்தவும். மேலும் 10 நிமிடங்கள் பாலை கொதிக்க வைத்தால் தயிர் கெட்டியாக கிடைக்கும். இருப்பினும் பாலை நீண்ட நேரம் கொதிக்க வைக்க வேண்டாம்.
நீங்கள் புதிய, நல்ல, தரமான உறை தயிரை பயன்படுத்துவது நல்லது. உறை தயிரை பாலில் சேர்க்கும் முன் பாலை அறை வெப்பநிலைக்கு கொண்டு வாருங்கள்.
நீங்கள் ஒரு டீஸ்பூன் முதல் ஒரு தேக்கரண்டி வரை உறை தயிரை பயன்படுத்தலாம். புளிப்பான உறை தயிரை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் உங்கள் தயிர் புளிப்பாக மாறும்.
தயிர் கெட்டியாக மாற பாலை நுரை வரும் வரை கலக்குவது அவசியம்.
உறை தயிரை பாலில் ஒரே மாதிரியாகக் கரைப்பது மிகவும் முக்கியம்..
நல்ல தயிர் கிடைக்க மண் பாத்திரமே சிறந்தது.
நீங்கள் குளிர்ந்த காலநிலையில் வாழ்ந்தால் தயிர் கிடைக்க அதிக நேரம் ஆகலாம். அதற்கு நீங்கள் பாலை ஒவனில் வைப்பது அல்லது நீங்கள் இனி பயன்படுத்தாத பழைய ஸ்வெட்டர்களால் மூடுவது போன்றவற்றை செய்வதன் மூலம் தயிரை சீக்கிரம் பெறலாம். கோடைகாலத்தில் தயிர் சீக்கிரம் உருவாகிவிடும்.
தயிரின் நிலைத்தன்மை பயன்படுத்தப்படும் பாலின் தரத்தை பொறுத்தது. எனவே எல்லா தயிரும் ஒரே மாதிரியாக இருக்காது.
நீங்கள் முதன்முதலில் தயிர் செய்பவராக இருந்தால் சிறந்த வழிமுறையை அறிய குறைந்தது இரண்டு முறையாவது முயற்சிக்க வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.