இட்லி எல்லோருக்கும் பிடித்த உணவு. இட்லியின் எளிதில் செரிமானமாகும் தன்மையால் குழந்தைகளுக்கான சிறந்த உணவாக இட்லி உள்ளது. ஆனால் தினமும் ஒரே மாதிரியாக இட்லி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு போர் அடித்துவிடும். அதற்காகவே உங்களுக்கு இந்த ரெசிபி. இதுவும் இட்லிதான், ஆனால் குழந்தைகளுக்கு பிடித்த முந்திரி சேர்த்த காஞ்சிபுரம் இட்லி. இந்த இட்லி காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் செய்யப்படுகிறது. இப்போது, இந்த காஞ்சிபுரம் ஸ்பெஷல் இட்லியை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உளுந்து – 1 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
இட்லி அரிசி – 1 கப்
பச்சரிசி – 1 கப்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்னெய் – 1 தேக்கரண்டி
கடுகு – ¼ டீஸ்பூன்
கடலை பருப்பு – ¼ டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 10-20
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – டீஸ்பூன்
சுக்கு பொடி – ½ டீஸ்பூன்
பெருங்காயம் – ¼ டீஸ்பூன்
செய்முறை
இட்லி அரிசி மற்றும் பச்சரியை ஒன்றாகவும், உளுந்துடன் வெந்தயம் சேர்த்து இதனை தனியாகவும் 4- 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஊறிய பின்னர், உளுந்து மற்றும் அரிசிகளை தனித்தனியாக அரைத்து, உப்பு சேர்த்து ஒன்றாக கலந்துக் கொள்ளுங்கள். இந்த மாவை 7-9 மணி நேரம் புளிக்க செய்யுங்கள்.
அடுத்து அடுப்பில் ஒரு சிறிய வாணலி அல்லது தாளிக்கும் கரண்டியை வைத்து, சூடான பின் அதில் நல்லெண்னெய் சேர்த்து காய விடுங்கள்.
அதில் கடுகு, கடலை பருப்பு, உளுந்து மற்றும் முந்திரி சேர்த்து பொரிய விடுங்கள். முந்திரி பொன்னிறமாக வறுபட்டவுடன், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பின் இதனை மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
மிளகு மற்றும் சீரகத்தை கொரகொரவென அரைத்து கொள்ளுங்கள். மீண்டும் அடுப்பில் அதே கரண்டியை வைத்து நல்லெண்னெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்தவுடன் அரைத்து வைத்த மிளகு சீரகத்தை அதில் போட்டு பொரியவிடவும்.
இதனையும் மாவுடன் சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் சுக்கு பொடி மற்றும் பெருங்காயம் சேர்த்து, மாவை நன்றாக கலந்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாழை இலையை லேசாக சூடாக்கி, கிண்ணங்களில் பதியுமாறு வைத்துக் கொள்ளுங்கள். இலை மீது சிறிது எண்ணெய் விட்டு, அதில் மாவை ஊற்றுங்கள். வாழை இலை இல்லையென்றால், கிண்ணங்களில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்துங்கள். கிண்ணங்களை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
சுவையான காஞ்சிபுரம் இட்லி ரெடி! நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil