பூரி செய்து சாப்பிட வேண்டும் என ஆசை இருக்கு, ஆனால் உங்கள் வீட்டில் கோதுமை மாவு இல்லையா? கவலையை விடுங்கள், உங்களுக்காகவே இந்த அற்புத ரெசிபி. கோதுமை மாவு அல்லது மைதா இல்லாமல் பூரி செய்யலாம். இதற்கு உங்களிடம் ரவை மட்டும் இருந்தால் போதும், அருமையான பூரி ரெடி. இதற்கு டேஸ்டியான உருளைக்கிழங்கு குருமா செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும். வாருங்கள் ரவையைக் கொண்டு பூரி எப்படி செய்வது என்பதையும், அதற்கான வெள்ளைக் குருமா எப்படி செய்வது என்பதையும் பார்ப்போம்.
இந்த பூரியையும் குருமாவையும் செய்ய உங்களுக்கு சில நிமிடங்களே ஆகும். வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டே இதனை செய்யலாம். முக்கியமாக குருமாவுக்கு தக்காளி தேவையில்லை.
டேஸ்டியான பூரி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
ரவை – ¼ கிலோ
எண்ணெய் – தேவையான அளவு
உருளைக் கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
தேங்காய் துருவல் – 1 கைப்பிடி அளவு
சோம்பு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 1
ஏலக்காய் – 1
இலவங்கப் பட்டை – 1 துண்டு
பிரிஞ்சி இலை - 1
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ரவையை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை பிசைய வேண்டும்.
பூரி செய்யும் பதத்திற்கு மாவை பிசைய வேண்டும். சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைவது நல்லது. மாவை நன்றாக பிசைந்த உடன் சிறிது நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
இந்த இடைப்பட்ட நேரத்தில், நீங்கள் பூரிக்கு தேவையான குருமாவை செய்து விடலாம். முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது குருமாவிற்காக ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். அதே நேரம் இன்னொரு கடாயில் பூரிக்கு எண்ணெய் ஊற்றி காய விட்டுக் கொள்ளுங்கள்.
குருமாவிற்கான கடாயில் எண்ணெய் ஊற்றி காய விட்டு, அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை ஆகியவற்றைச் சேர்த்து பொரிய விட வேண்டும்.
எல்லாம் பொரிந்தவுடன், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் வேகவைத்து நறுக்கி வைத்துள்ள உருளைக் கிழங்கை இதனுடன் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சோம்பு சேர்த்து அரைத்து வைத்த தேங்காய் துருவலை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். இதன் மீது கடைசியாக கொத்தமல்லி சேர்த்து மூடி வைத்து விடவேண்டும்.
இதனை 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விட வேண்டும்.
இப்போது பூரிக்கு மாவை தேய்த்து, எண்ணெய்யில் போட்டு பூரியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் அருமையான ரவா பூரியும் குருமாவும் ரெடி! இதனை உங்கள் வீட்டில் நீங்களும் செய்து பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil