நம்மில் பெரும்பாலானோர்க்கு காலை மற்றும் இரவு உணவு, இட்லி, தோசை அல்லது சப்பாத்தி தான். ஆனால் இதற்கு தினமும் ஒரே மாதிரியான சட்னி, சாம்பார் அல்லது குருமாவை சாப்பிடுவது நமக்கு சலிப்பை ஏற்படுத்தும். மேலும் சாம்பார் அல்லது குருமா செய்ய பொருட்களும் நேரமும் அதிகம் தேவைப்படும். உங்களுக்காவே, குறைந்த நேரத்தில் சுவையான சட்னி செய்முறை இங்கே. இரண்டு வெங்காயம் இருந்தால் போதும் சுவையான வெங்காய சட்னியை சில நிமிடங்களிலே தயார் செய்யலாம். அதுவும் இதில் தக்காளி சேர்ப்பதில்லை. வெங்காய சட்னி செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 2
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 7
புளி – நெல்லிக்காய் அளவு
கடுகு – ½ டீஸ்பூன்
உளுந்து – ½ டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயத்தை பொடியாக அல்லாமல், சற்று பெரிதாகவே நறுக்கி கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடேற்ற வேண்டும். சூடானதும் எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் கடலைப் பருப்பை சேர்த்து பொரிய விட வேண்டும். நன்றாக பொரிந்த பின் தனியா சேர்த்து, பொரிய விட வேண்டும்.
பின்னர் இதனுடன் வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து, எல்லாம் பொன் நிறமாக வரும் வரை வதக்க வேண்டும். பொன்னிறத்துடன் வாசனை வந்ததும், ஒரு சிறிய பாத்திரத்தில் கொட்டி ஆற விட வேண்டும்.
பின்னர் வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் சேர்த்து காய விட வேண்டும். இதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதனுடன் புளி சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின், அடுப்பில் இருந்து இறக்கி, ஆற வைக்க வேண்டும்.
எல்லாம் நன்றாக ஆறிய பிறகு, ஒரு மிக்ஸி ஜாரில், வதக்கி வைத்த வெங்காயம் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அதே வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து காய விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்து சேர்த்து பொரிய விட வேண்டும்.
பின்னர் இதனுடன் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். பூண்டு நன்றாக வதங்கிய உடன் இதனை அப்படியே அரைத்து வைத்த சட்னியில் சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் எளிய, சுவையான வெங்காய சட்னி தயார்!
இதனை இட்லி, தோசை, சாப்பாத்தி என எந்த உணவிற்கு சேர்த்து சாப்பிடலாம். வெந்தயம் மற்றும் தனியா சேர்த்து அரைத்திருப்பதால் கூடுதல் சுவை நமக்கு கிடைக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இந்த எளிய செய்முறையை செய்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil