நமது காலை உணவில் பெரும்பாலும் இடம்பிடிப்பது இட்லி, தோசை தான். இவற்றை சட்னி மற்றும் சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால், தினமும் சட்னி, சாம்பார் செய்வது பலருக்கு கடினமாக இருக்கலாம். குறிப்பாக வேலைக்கு செல்வோர் அவசரத்தில் கிளம்பும்போது சரியாக செய்வதில்லை, அல்லது சட்னி மற்றும் சாம்பாரில் ஏதேனும் ஒன்றுடன் நிறுத்திவிடுகின்றனர்.
ஆனால் இதற்கு எளிமையான, அதேநேரம் சுவையான தீர்வு உள்ளது. நீங்கள் இந்த பூண்டு பொடியை உங்கள் வீட்டில் செய்து வைத்துக் கொண்டால், சிறிது நல்லெண்ணெய்யை ஊற்றி ஈஸியா சாப்பிட்டு கிளம்பலாம்.
இத்தகைய பூண்டு பொடி செய்வதிலும் ஒரு ரகசியம் உள்ளது. எனவே பூண்டு பொடி எப்படி செய்வது? அந்த ரகசியம் என்ன? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பூண்டு – இரண்டு (18 பல் கொண்ட பெரியது)
உளுந்து – 1 கப்
கடலை பருப்பு – ½ கப்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 15- 20
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயப் பொடி – ½ டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பூண்டை தோல் உரித்து, உரலில் இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு உரலில் இடித்துக் கொள்வதால், கிரிஸ்பியாகவும், ஈரப்பதம் இல்லாமலும் வறுத்துக் கொள்ள முடியும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடேறிய பின், தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும்.
எண்ணெய் காய்ந்த பின், பூண்டை மிதமான சூட்டில் நல்ல பதத்தில் வறுத்துக் கொள்ள வேண்டும். பூண்டை கருகிவிடக் கூடாது. வறுத்த பூண்டை தனியாக எடுத்து ஆற வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, உளுந்தைப் போட்டு மிதமான சூட்டில் செவக்க, வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். இதனையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே வாணலியில் கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அந்த வாணலியில் உப்பு, மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்த அனைத்து பொருட்களையும், நன்கு ஆறவைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு மிக்ஸியில் அனைத்துப் பொருட்களையும் போட்டு, கூடவே பெருங்காயப் பொடியையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் சுவையான, சூப்பரான பூண்டு பொடி ரெடி. சூடச்சூட ஆவியில் வெந்த இட்லிக்கு, இந்த பூண்டு பொடியை நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். ஒரு இட்லி எக்ஸ்ட்ரா போகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“