நம்மில் சிலர், இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு தேங்காய் சட்னியை விரும்ப மாட்டார்கள். ஆனால் தினமும் சாம்பார் என்பது செய்வதற்கு சற்று கடினமாக இருக்கும். இதற்கு மாற்றாக என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு, தக்காளி சட்னி அல்லது புதினா சட்னியை விட எளிமையான தேங்காய் சேர்க்காத காரசாரமான வெள்ளை சட்னி உங்களுக்கு உதவும். பொட்டுக்கடலை மற்றும் வெங்காயம் மட்டும் சேர்த்து இந்த வெள்ளை சட்னி செய்யப்படுகிறது.
இப்போது தேங்காய் சேர்க்காத பொட்டுக்கடலை சட்னி எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை – ¼ கப்
பச்சை மிளகாய் – 10 – 12
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2 (பெரியது)
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – ½ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
சின்ன வெங்காயம் – 10
பெருங்காயம் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடாக்கவும். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய்களை போட்டு வதக்க வேண்டும்.
பச்சை மிளகாய் நிறம் மாறியதும், நறுக்கிய வைத்த வெங்காயத்தை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். இல்லையென்றால் சட்னி சுவையாக இருக்காது.
வதக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை, அடுப்பில் இருந்து இறக்கி, நன்றாக ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் கொட்ட வேண்டும். இதனுடன் பொட்டுக்கடலை, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இந்த சட்னி சற்று கொரகொரப்பாக இருந்தால் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். எனவே அதற்கேற்றவாறு அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணியாக இருந்தாலும் சுவை அதிகமாக இருக்கும்.
அடுத்ததாக, சட்னியை தாளிப்பதற்கான செயல்முறை செய்ய வேண்டும். இதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய விட வேண்டும்.
எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். கூடவே நறுக்கிய சிறிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியுடன், இதில் பெருங்காயம் சேர்த்து கலந்து விட்டு, அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். உடனே இதில் அரைத்து வைத்த சட்னியை சேர்ந்து கலந்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் சுவையான, தேங்காய் சேர்க்காத வெள்ளை சட்னி தயார்!
இந்த சட்னியை ’மதுரை தண்ணி சட்னி’ என்றும் சிலர் சொல்லுவர். தேங்காய் விரும்பாத அல்லது சேர்க்க கூடாதவர்கள் இந்த சட்னியை முயற்சிக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.