சிக்கன் பக்கோடா என்றாலே, நாவில் எச்சில் ஊறும். வீட்டில் அதை செய்யத் தெரியாமல் தான் சாலையோரத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகளுக்கோ, அல்லது வேறு கடைகளுக்கோ சென்று சிக்கன் பக்கோடா வாங்குவோம். 4 பீஸ் கொடுத்திட்டு நியாயமே இல்லாம 40 ரூவா கேட்கும் போது, நம்ம மனசு வலிக்கும் பாருங்க... அதுலயும் ரெண்டு பீஸு வெறும் மசாலாவாத் தான் இருக்கும். எவ்ளோ நாள் அதே எண்ணெய்யை யூஸ் பன்றாங்கணும் தெரியாது. இது எல்லாத்தையும் விட, அந்த கறி உண்மையில் சிக்கன் தானா என்பதில் தான் ட்விஸ்ட்டே இருக்கிறது. சமீபத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் நாய் கறி பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான செய்தியை நீங்களும் அறிந்திருக்கலாம். அது வெள்ளாட்டுக் கறி என்று சொன்னாலும், உண்மை என்னவென்று அதை வெட்டியவருக்கும் கடவுளுக்குமே வெளிச்சம்!
இவ்வளவு பயத்துடன் ஏன் வெளியில் சென்று சிக்கன் பக்கோடா சாப்பிடனும்? நாமே சென்று கோழி வாங்கி, அரை மணி நேரத்தில் சிக்கன் பக்கோடா செய்துவிடலாம். அது எப்படி என்பதை இங்கே பார்ப்போம்,
தேவையானவை:
சிக்கன் (எலும்பு நீக்கியது) - கால் கிலோ
பெரிய வெங்காயம் (நீளமாக நறுக்கியது) - 50 கிராம்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
கடலை மாவு - இரண்டு டேபிள்ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
கொத்தமல்லித்தழை(பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, மெல்லிய நீளமான துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். நறுக்கிய சிக்கன் துண்டுகளில் நன்கு தண்ணீர் வடித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், கடலை மாவு, கார்ன் ஃப்ளார் மாவு, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலக்கி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சிறிது சிறிதாக எண்ணெயில் சேர்த்து பொன்நிறமாகப் பொரித்து எடுக்கவும். சிக்கன் பக்கோடாவுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து சூடாகப் பரிமாறலாம்.
குறிப்பு:
சிக்கன் பக்கோடா கலவை கெட்டியாக இருந்தால், அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். கலவை நீர்த்துப் போனால் சிறிது கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம்.
சூடான 'கன்சிக் டாபக்கோ' ரெடி!