முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு எத்தனையோ வழிமுறைகளை இணையத்தில் ஆராய்ந்திருப்போம். மேலும், ஷம்பூ, ஹேர் ஆயில், சீரம் போன்ற பொருள்களையும் ஏராளமாக செலவு செய்து வாங்கி இருப்போம். ஆனால், இவற்றில் இரசாயனங்கள் கலந்திருப்பதால் சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இவற்றை தடுக்க ஹோம்மேட் ஹேர் ஆயில் எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்பது குறித்து இதில் பார்க்கலாம். அரை டேபிள்ஸ்பூன் வெந்தயம் மற்றும் மூன்று கைப்பிடி அளவு கறிவேப்பிலையை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து, அடுப்பில் இரும்பு பாத்திரம் வைத்து அதில் 400 மில்லி லிட்டர் அளவிற்கு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். இந்த எண்ணெய் மிதமான சூட்டிற்கு வரும் போது, அரைத்து வைத்திருந்த வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை இதில் சேர்க்க வேண்டும்.
இந்த எண்ணெய்யை சுமார் 15 நிமிடங்கள் அடுப்பில் காய்த்து எடுக்க வேண்டும். அதன் பின்னர், இந்த எண்ணெய் ஆறியதும் வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த எண்ணெய்யை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்த வேண்டும்.
இரவு நேரத்தில் இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து விட்டு, காலை எழுந்ததும் குளித்து விடலாம். இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.