தமிழ்நாடு வேகமாக நகரமயமாக்கலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தாலும், நகரங்களில் இருக்கும் மக்களிடையேயும் இன்னும் விவசாயம் பற்றிய உணர்வு இருக்கத்தான் செய்கிறது. அதற்கான சான்றுதான் நகரங்களில் உயர்ந்த கட்டிடங்களின் மாடிகளில் காணப்படும் மாடித்தோட்டம்.
பரபரப்பான பெரிய நகரமோ, சிறிய நகரமோ, அங்கே மாடித் தோட்டம் அமைத்து பராமரிப்பது என்பது மன மகிழ்ச்சிக்கானது மட்டுமல்ல, அது ஒரு தற்சார்பு பொருளாதாரம். நமது வீட்டுக்கான காய்கறி, கீரை, பழங்கள் அன்றாட உணவுத் தேவைகளுக்கு நம்ம வீட்டு மாடியில் நாமே பயிர் செய்து பயன்படுத்திக்கொள்ளும்போது ஒரு பெரிய சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும்.
பொதுவாக மாடித்தோட்டத்தில் காய்கறி, செடிகள் வளர்ப்பதைப் பார்த்திருப்போம், ஆனால், கீரை வளர்ப்பது என்பது மிகவும் அரிதாகவே செய்வார்கள். சிலர், கீரை விதைக்க வேண்டும் என விரும்பினாலும் எப்படி விதைக்க வேண்டும் எப்படி வளர்க்க வேண்டும் என்று தெரியாததால் விட்டுவிடுவார்கள்.
உங்கள் மாடித் தோட்டத்தில் கீரை விதைக்க விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக மாடித் தோட்டத்தில் கீரை எப்படி விதைப்பது என நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி அளித்த டிப்ஸை அப்படியே தருகிறோம்.
மாடித்தோட்டத்தில் கீரை விதைக்க கொஞ்சம் ஆற்று மணல் இருந்தால் போதும் என்று கூறுகிறார். அனிதா குப்புசாமி மாடித்தோட்டத்தில் கீரை விதையை எப்படி விதைக்க வேண்டும் என்பதை யூடியூபில் செய்து காட்டியுள்ளார்.
முதலில் கீரை விதைப்பதற்கான ஒரு கார்டன் பேக் வாங்கிக்கொள்ளுங்கள். இந்த கார்டன் பேக் ஆன்லைனில் கிடைக்கிறது. ஆற்று மணல் எடுத்து கார்டன் பேக்கில் ஓட்டைகள் இருக்கும் பகுதியில் போட வேண்டும். பிறகு பரவலாக ஆற்று மண் தூவ வேண்டும். பிறகு உரம் மண்ணை எடுத்து முக்கால் பகுதி போட வேண்டும். பிறகு ஒரு டீஸ்பூண் அளவு கீரை விதையை எடுத்து விரலால் தூவி விதைக்க வேண்டும். பிறகு கைகளால் லேசாக மண்ணை மறைத்துவிடுங்கள். பிறகு, தண்ணீரை எடுத்து லேசாக கைகளால் தெளித்துவிட வேண்டும்.
தண்ணீரை அப்படியே எடுத்து ஊற்றக்கூடாது. 2-3 நாட்களுக்கு தண்ணீரை கைகளால் தெளித்துவிட வேண்டும். அவ்வளவுதான், கீரை பசுமையாக முளைத்து வளர்வதைப் பார்த்து சந்தோஷத்தில் திளைப்பீர்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.