எல்லோரும் ஜிம் வந்து உடற்பயிற்சி செய்யும்போது ஒரு குறிக்கோளுடன்தான் வருவார்கள். அந்த குறிக்கோளை அடைய முடியாதவங்கதான் ஜிம்முக்கு ஒழுங்காக வராமல் விட்டுவிடுவார்கள்.
அதற்குக் காரணம் அவர்கள் மனதளவில் இன்னும் தயாராகவில்லை என்பதே ஆகும். 100 சதவீத நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஜிம்முக்கு நம்மால் தொடர்ந்து சென்று உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜிம் டிரைனர் சதீஷ்.
இனி அவரது வார்த்தைகளிலிருந்து…
உங்கள் இலக்கை தீர்மானித்ததும் நம்மால் அதை செய்ய முடியும் என்று நம்புங்கள். ஒரு நாளைக்கு 7 நிமிடங்கள் இடைவிடாத பயிற்சி உடல் நன்றாக செயல்பட போதுமானதாகும். 45 நிமிடங்கள் நீங்கள் பயிற்சி செய்தால் வேகத்துடன் நல்ல எனர்ஜியுடனும் காணப்படுவீர்கள்.
சில பயிற்சியாளர்கள் காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அப்போதுதான் உடல் எடை குறையும் என்று சொல்வார்கள். அப்படி செய்தால் உடல் எடை குறையும்தான். ஆனால், 4 மணி நேரம் செய்தால்தான் உடல் எடை குறையும் என்று நீங்கள் மனதுக்குள் நினைத்துக் கொள்வீர்கள்.
அவ்வளவு நேரத்தை ஒருவரால் செலவிட முடியாது என்பதால் ஜிம்மை விட்டு நின்று விடுவார்கள்.
உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கிறீர்களோ இல்லையோ தினமும் ஏதாவது உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உங்கள் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
ஒரு இயந்திரத்தையே இதற்கு உதாரணமாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இயந்திரம் உபயோகப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் கெட்டுவிடும். அதை மறுபடியும் இயங்க வைக்க நாம் சர்வீஸ் சென்டரில் கொடுக்க வேண்டியது வரும்.
உடலுக்கு ஏதாவது பயிற்சி கொடுத்துக் கொண்டே இருங்கள். நான் கூறுவதற்கு பின்னால் அறிவியல் இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
ஜிம்மில் பர்சனல் டிரைனர் ஏன் அவசியம்?
ஜிம்முக்கு தொடர்ந்து செல்வதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
1.நேரத்தை ஒதுக்குங்கள்: ஜிம்முக்கு செல்வதற்கென்று தனியாக நேரத்தை ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் அதை மட்டுமே செய்ய வேண்டும் என்பதை தீர்மானியுங்கள். மற்ற பணிகளைக் காட்டிலும் உடல்நலம் முக்கியம் என்பதை மனதுக்குள் அடிக்கடி கூறிக் கொள்ளுங்கள்.

- அலாரம் வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு சரியாக நினைவுப்படுத்திவிடும்.
- தினமும் ஒரு இலக்கை வைத்து உடற்பயிற்சி செய்யுங்கள்.
- Fitness தொடர்பாக தினமும் ஏதாவது ஒரு தகவலை தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் பயிற்சியாளரிடம் நீங்கள் பிட்னஸ் தொடர்பான தகவல்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஒரு விஷயத்தை பற்றி நாம் அதிகம் தெரிந்துகொள்ளும்போது அதில் நமக்கு எழும் சந்தேகங்கள் தீர்ந்ததும் நாம் இன்னும் உற்சாகத்துடன் அந்த செயலை மேற்கொள்வோம்.
- முதல் முறையாக ஜிம் வருபவர்கள் ஒரு மாதத்துக்கு மிதமான உடற்பயிற்சிகளையே செய்யுங்கள். அப்படியான பயிற்சிகளைத்தான் பயிற்சியாளரும் உங்களுக்கு கொடுப்பார். எடுத்தவுடனேயே நிறைய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று எண்ணாதீர்கள்.
ஏனென்றால் உங்கள் உடலுக்கு இத்தனை நாள்களாக ஓய்வு கொடுத்துவிட்டு திடீரென்று இந்தப் பயிற்சிகளை செய்தால் உடல் தசைகளில் வலி ஏற்படும். தொடர்ந்து நீங்கள் உடற்பயிற்சி செய்தால் வலி ஏற்படாது. ஆனால், ஒரே நாளில் எல்லாம் செய்ய வேண்டும் என்று மெனக்கெட்டால் அடுத்த நாள் உங்களால் எழுந்திருக்கக் கூட முடியாது. சோர்வுடன் காணப்படுவீர்கள். - மெதுவாக முன்னேறலாம்: நமது தசைகள் உடற்பயிற்சிக்கு பழக்கமானதும், கடின உடற்பயிற்சிகளை கற்றுக் கொண்டு செய்யத் தொடங்கலாம்.
- உடற்பயிற்சிகளை எப்படி அதிக fun கலந்து செய்யலாம் என்று உங்கள் பயிற்சியாளரிடம் கேளுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு உடற்பயிற்சிகள் எளிதாக இருக்கும்.
- நான் இந்த வாரம் 4 நாள் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டு அடுத்தடுத்த நாள்களை விட்டுவிடாதீர்கள். உங்களால் ஜிம்முக்கு ஏதாவது காரணத்தால் செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டிலேயே ஏதாவது எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
- அதேநேரம், ஒரே ஒரு நாள் நீங்கள் உங்கள் உடலுக்கு ஓய்வு கொடுத்துதான் ஆக வேண்டும். வாரத்தில் ஒரு நாளை ஓய்வெடுக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- தினமும் காலையில் எழுந்தவுடன் நாம் ஏன் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினோம் என்பதை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் ஜிம்முக்கு தவறாமல் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“