தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வரும் ஆடி மாதத்தில் 1000 பேரை கட்டணமில்லாமல், இலவசமாக ஆன்மிக பயணம் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு அழைத்து செல்லப்படும் இந்த பயணம் 4 கட்டங்களாக மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆடி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு சிறந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடிமாதம் முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு சிறப்பு மாதமாகும். அம்மன் கோயில்களில் பொங்கல் விழாக்களும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
ஆடி மாதக் கூழ் ஊற்றுவதும் சிறப்பாகும். அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்த ஆடி மாதத்தில் கட்டணமில்லாமல் ஆன்மிக பயணமாக 1000 பேரை புகழ்பெற்ற அம்மன் கோயிலுக்கு அழைத்து ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மூத்த குடிமக்களை கட்டணமில்லா ஆன்மிக பயணம் அழைத்துச் செல்ல தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மதுரை, திருச்சி, நெல்லை, சென்னை, தஞ்சாவூர் ஆகிய மண்டலங்களை தலைமையிடமாகக் கொண்டு, 1,000 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
ஆடி மாத ஆன்மிக பயணம் 4 கட்டங்களாக, வரும் 19-ம் தேதி, 26ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 2ம் தேதி, 9ம் தேதிகளில் தொடங்குகிறது. இதில், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பித்து இலவச ஆன்மீகப் பயணத் திட்டத்தில் சேரலாம்.
பக்தர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர் என்பதை உறுதிப்படுத்த வயது சான்றிதழ் இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி இருத்தல் வேண்டும். ஆதார் விவரங்களை கொடுக்க வேண்டும் உள்ளிட்டவற்று கூறப்படுள்ளது.
இந்த தகுதியின் கீழ் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை அறநிலையத் துறை இணை கமிஷனர், உதவி கமிஷனர், ஆய்வாளர், கோயில் அலுவலகங்களில் பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம். அல்லது, hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் டவுன்லோடு செய்தும் விண்ணப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“