குறை ஒன்றும் இல்லை... ஹிர்த்திக் ரோஷனின் செல்லப்பிள்ளையை உங்களுக்கு தெரியுமா?

வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள், ஏளனமான பார்வைகள், கடுமையான போராட்டங்களை கடந்து இப்போது எங்கு நிற்கிறார் தெரியுமா?

கடவுள் சிலை செய்யும் கண் பார்வையற்றவர்,  ஒருமுறை கடவுளிடம் சொன்னாராம் “ஏன் உனக்கு என் மீது கோபம்.  என்னை மட்டும் குறையுடன் படைத்து விட்டாய். ஆனால் நான் ஒருமுறை கூட உன் சிலையை  குறையுடன் செய்ததில்லை” என்று. இப்படி கடவுளின் படைப்பில் சில குறைபாடுகள் நம்மால் ஏற்றுக்  கொள்ள முடியாத ஒன்று.

ஆனால், குறையை குறையாக பார்க்காமல் அதையும் நிறையாக்கி விட்டால் இந்த உலகம் உங்களின் பக்கம்.  அப்படி தான்  தன் குறையை  கடவுளின் பரிசாக பார்த்து தன்னை போல் இருக்கும் எல்லோருக்கும் ஒரு முன் உதாரணமாக வாழ்ந்து வருகிறார் அபிநாவ் சவுதிரி.

18 வயதாகும் இவர் டவுன்ஸ் சிண்ட்ரோம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர். அத்துடன் பார்வை குறைபாடும் இவருடன் வந்து ஓட்டிக் கொண்டது. வாழ்க்கையில் பல  ஏமாற்றங்கள்,  ஏளனமான பார்வைகள்,  கடுமையான போராட்டங்களை கடந்து இப்போது எங்கு நிற்கிறார் தெரியுமா?

டெல்லியில் நடைப்பெற்ற சர்வதேச நடனப்போட்டியில் 2 ஆவது இடத்திற்கு தேர்வாகியுள்ளார்.  280 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில்  கடைசியாக 70 போட்டியாளர்கள் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்குள் நடந்த போட்டியில் அபிநாவ்ன் 2 ஆவது இடத்தை பிடித்து சாதித்துள்ளார்.

சிறுவயதில் இருந்தே  அபிநாவ்வுக்கு டான்ஸ் என்றால் உயிராம்.  தூரத்தில் எங்கேனும் பாடல் கேட்டால் கூட  உடனே நடனம் ஆட தொடங்கி விடுவார். இவரின் பெற்றோர்களும் அவருக்கு பக்கபலாமக் இருக்கின்றன. எங்கு எந்த நடனப்போட்டி நடைப்பெற்றாலும் அபிநாவை உடனே அழைத்து சென்று விடுவார்களாம்.

இதுக் குறித்து பேசிய அபிநாவ்வின் தந்தை,  “  என் மகன் எங்களுக்கு எப்போதும் செல்லக் குழந்தை தான். இறைவன் தந்த சிறப்பு பிள்ளை தான். ஆனால் பார்ப்பவர்கள் அப்படி இல்லை. சரியாக நடக்க க் கூட தெரியாத அவனுக்கு எதற்கு நடனம் என்றெல்லாம் என உறவினர்களே என்னிடம் கூறியுள்ளனர்.

அதைப்பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. அபிநாவ்வின் தங்கை தான் அவனின்  திவீர ரசிகை.  அண்ணன் பங்குபெறும்  எல்லா போட்டியிலும் அவனை உற்சாகப்படுத்த முதல் ஆளாக சென்று விடுவாள்” என்று கூறியுள்ளார்.

அபிநாவ் இதுவரை, 100 டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார்.  பிரபலமான பல  டிவி  ஷோக்களிலும் அபிநாவை சிறப்பு விருந்தினராக பலர் அழைத்துள்ளனராம்.  ஒருமுறை அபிநாவ் கலந்துக்  கொண்ட நடனப்போட்டியில் பாலிவுட் ஸ்டார்  ஹிர்த்திக் ரோஷன் கலந்துக் கொண்டராம்.

அன்றைய நாள், அபிநாவ்வின் நடனத்தை பார்த்து அசந்து மேடையிலியே அபிநாவ்வை தூக்கி சுற்றியுள்ளார். அத்துடன்,  அபிநாவ்வின் நடனத்தை பார்த்து தீவிர ரசிகன்  ஆகிவிட்டதாகவும் ஹிர்த்திக் தெரிவித்துள்ளார்.

 

 

×Close
×Close