Soft Idli Flour Making Recipe Tips in Tamil : வீட்டிலேயே அரிசி, உளுந்தை அரைத்து இட்லி செய்து அசத்தும் பெண்களே! இட்லி மாவு ஓரிரு நாள்களில் புளித்து விடுகிறதா? என்ன செய்வதென புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? இதோ, உங்களுக்காக சாஃப்ட் இட்லி சீக்ரெட் டிப்ஸ். சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
வேலைக்குச் செல்லும் பெண்களின் ரெகுலர் டிஸ்களில் ஒன்றாக இட்லி இடம்பிடித்துள்ளது. நேர மேலாண்மை, வீட்டில் விரும்பி உண்பார்கள் என பல்வேறு காரணங்களால் அவர்களின் பெஸ்ட் சாய்ஸ் இட்லி தான். ஒரு வாரத்திற்கு தேவையான அளவு மாவை அரைத்து வைத்துவிட்டு, அடுத்த மூன்றே நாள்களில் மாவு புளித்துவிட்டது, இனி தோசை தான் என்ற முடிவுக்கு செல்லும் பெண்களே அதிகம். இந்த நிலையை தவிர்த்து, நீங்கள் மாவு அரைக்கும போது செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவைகளை என சில ஈஸி டிப்ஸ்களை தெரிந்துக் கொண்டாலே, மாவு புளிக்காமலும் ஒரு வாரத்திற்கும் இட்லியையே செய்யலாம்.
கிரைண்டரில் மாவு அரைப்பதற்கு முன்னர் ஒரு முறை நன்கு கழுவி சுத்தமாக வைத்து விடுங்கள். அடிக்கடி மாவு அரைக்கும் சிலர் கழுவுவது இல்லை. முந்தைய முறை என்ன தான் கழுவி வைத்தாலும் அதன் புளிப்புத்தன்மை கிரைண்டரில் ஒட்டியிருக்கும். எனவே இம்முறை கழுவாமல் அரைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும்.
- அரிசியும் உளுந்தும் குறைந்தது 3 மணி நேரமாவது ஊற வேண்டும். அதற்கு குறைவாக ஊறினால் மாவு புளித்து போக வாய்ப்பு உள்ளது. உளுந்தை நீங்கள் அரைக்கும் பொழுது கைப்படுவதை தவிர்க்கவும். இடையிடையே தண்ணீர் தெளித்து ஒரு பிளாஸ்டிக் கரண்டி அல்லது மரக்கரண்டி மூலமாகத் தள்ளி விட்டு அரைக்கலாம்.
- முதலில், உளுந்தை அரைத்தப் பின், கைப்படாமல் பிளாஸ்டிக் கின்னங்களை கொண்டு எடுத்து, சுத்தமான வேறு பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மாவு சீக்கிரம் புளித்துப் போவதை தவிர்க்கலாம்.
- அரிசியை வழக்கம் போல் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். அரிசி அரை பட 15 நிமிடமே போதுமானது. அரிசி அரைந்து முடிந்ததும் மாவை எடுக்காமல் கிரைண்டரில் ஏற்கனவே நாம் அரைத்து எடுத்து வைத்திருந்த உளுந்தையும் அரிசியுடன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் அளவிற்கு ஆட்டி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அரிசியையும், உளுந்தையும் தனித் தனியாக எடுத்து ஒன்றாக சேர்த்து கைகளால் கலந்து விட வேண்டிய அவசியமில்லை.
- பிறகு, கிரைண்டரை தனியே எடுத்து மாவு சேமிக்க வேண்டிய பாத்திரத்தில் அப்படியே கவிழ்த்து கை வைக்காமல் கொட்டிக் கொள்ளுங்கள். முழுவதுமாக கைகள் படாமல் எடுக்க முடியாது. எனவே கடைசியில் இருக்கும் சிறிதளவு மாவை அப்படியே விட்டு விடுங்கள். பாத்திரத்தில் எடுத்த மாவை உப்பு சேர்க்காமல் மூடி வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.
- மீதமிருக்கும் மாவை தனியே ஒரு பாத்திரத்தில் கைகளால் சுத்தமாக எடுத்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். மாவு புளிப்பதற்கு சுமார் 8 மணி நேரம் ஆகும். இந்த மாவை மறுநாள் காலையில் இட்லி சுட்டால், பஞ்சுபோல் இட்லி வரும்.
- ஃப்ரிட்ஜில் இருக்கும் மாவை உங்களுக்கு எப்போது தேவையோ, அப்போது மட்டும் வெளியே எடுத்து உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் உபயோகப்படுத்துவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே வெளியே எடுத்து வைத்து விடுங்கள். அப்போது தான் உங்களுக்கு தேவையான அளவிற்கு மாவு புளிக்கும்.
நாம் சுத்தமான முறையில் கைகள் படாமல் உப்பு சேர்க்காமல் அரைத்து எடுத்து வைத்ததால், மாவு சீக்கிரமாக புளிக்காது. ஒரு வாரத்திற்கு மேல் ஆனாலும் புளிக்காமல் பிரஷ்ஷாக இருக்கும். எனவே இந்த முறையை பயன்படுத்திப் பாருங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.