Idli Recipe Tamil News, Raw Rice Idli Tamil Video: பச்சரிசி பயன்பாடு இப்போது அதிகரித்து வருகிறது. பழைய நாட்களைப் போல இப்போது வீட்டில் நெல் அவிக்கும் நடைமுறை இல்லை. எனவே நெல் விளைவிக்கும் பலரே பச்சரிசி சாப்பாடை விரும்ப ஆரம்பித்துவிட்டார்கள். கேரளாவில் இந்த நடைமுறை மிக அதிகம். தமிழ்நாட்டிலும் பிரபலமான ஹோட்டல்கள், மெஸ்களில் பச்சரிசி பயன்படுத்தி சாதம் வைக்கிறார்கள். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு புழுங்கல் அரிசியைவிட பச்சரிசி நல்லது என உணவியல் நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.
Advertisment
பச்சரிசியை பயன்படுத்தி சாதம் மட்டுமல்ல... பஞ்சு போல இட்லியும் செய்ய முடியும். பச்சரிசி இட்லி டேஸ்டியாகவும் இருக்கும். இதில் உளுந்து கலவை மாறுபடும். பச்சரிசியை பயன்படுத்தி இட்லி தயார் செய்வது எப்படி? என இங்கு பார்க்கலாம்.
Raw Rice Idli Tamil Video: பச்சரிசி இட்லி
Advertisment
Advertisements
இட்லிக்கு பொதுவாக 4 டம்ளர் புழுங்கல் அரிசிக்கு, ஒரு டம்ளர் உளுந்து போடுவது வழக்கம். ஆனால் பச்சரிசி இட்லி தயார் செய்ய, ஒரு டம்ளர் பச்சரிசிக்கு இரண்டு டம்ளர் உளுந்து தேவைப்படுகிறது.
முதலில் பச்சரிசியை நன்கு கழுவி விடுங்கள். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சூடாக்கி பச்சரிசியில் ஊற்றி அரை மணி நேரம் ஊற விட வேண்டும். அதே போல் உளுந்தையும் நன்றாகக் கழுவி, 3 மடங்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த தண்ணீரை மட்டுமே மாவு அரைக்க உபயோகப்படுத்த வேண்டும்.
முதலில் உளுந்தை கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஊற வைத்த தண்ணீரை ஊற்றி, நுரைக்க நுரைக்க அரைத்து எடுக்க வேண்டும். அதே போல் பச்சரிசியை தனியாக, ஊற வைத்த தண்ணீரை தெளித்து அரைக்க வேண்டும். இரண்டுமே அரைத்து முடித்ததும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கைகளால் நன்கு கலந்து விட வேண்டும்.
மாலையில் மாவு அரைத்து வைத்தால் மறுநாள் காலையில் இட்லி ஊற்றலாம். 8 மணி நேரம் வரை புளிக்க வைப்பது நல்லது. பெரிய தட்டுகளில் இட்லி ஊற்றி வைத்தால், சுமார் 25 நிமிடங்கள் வரை வெந்து வருவதற்கு நேரம் எடுக்கும். இந்த முறையில் மாவு கிரைண்டரில் தான் அரைக்க வேண்டும் என்பதில்லை. மிக்ஸியிலும் அரைத்துக் கொள்ளலாம். மிக்ஸியில் அரைத்தால் மல்லிகைப் பூ போல இட்லி கிடைக்கும்.