/indian-express-tamil/media/media_files/2025/06/09/yYLhc5rVue76XZjRfguK.jpg)
புதுசா ரோஜா செடி வாங்கினால் இந்த தவறை செய்யாதீங்க… இப்படி செய்தால் சூப்பரா பூக்கும்!
ரோஜாக்கள்... பெயரைக் கேட்டாலே அதன் நறுமணமும், அழகும் மனதில் வந்துபோகும். நமது வீட்டு பால்கனியிலோ, தோட்டத்திலோ நாம் நட்ட செடியில் ரோஜா மலரும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. ஆனால், பலருக்கும் புதிய ரோஜா செடியை எப்படி நட வேண்டும், சரியாக வளருமா? என்ற சந்தேகம் இருக்கும். இந்தப் பதிவில் ரோஜா வளர்ப்பை ஏ.1 நர்சரி கார்டன் என்ற யூடியூப் சேனலில் கூறிய டிப்ஸ் பற்றி விரிவாக காணலாம்.
ஒரு செடியின் வளர்ச்சிக்கு அதன் வேர்களே ஆதாரம். அந்த வேர்கள் ஆரோக்கியமாக வளர, சரியான மண் கலவை அவசியம். ரோஜா செடிகளைப் பொறுத்தவரை, மிகவும் மென்மையான, இலகுவான மண்ணையே தேர்ந்தெடுக்க வேண்டும். தொட்டியின் அடிப்பகுதியில் சுமார் 5 அங்குல உயரத்திற்கு மண்ணை நிரப்ப வேண்டும். இது, செடியின் வேர்கள் தங்குதடையின்றி கீழ்நோக்கிச் செல்ல உதவும். நடவு செய்யும் போது மண் சற்று உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும். ஈரமான மண்ணில் செடியை வைக்கும்போது, அதன் மெல்லிய வேர்கள் உடைந்து போக அதிக வாய்ப்புள்ளது. எனவே, உலர்ந்த மண் வேர்களுக்குப் பாதுகாப்பானது.
மண்ணைத் தயார் செய்தவுடன், செடியை நடவு செய்வது அடுத்த படி. இது கவனமான செயல். செடியின் வேர்ப்பகுதி உடையாமல், அதை மெதுவாக எடுத்து தொட்டியின் மையத்தில் வைக்க வேண்டும். பின்னர், வேர்கள் முழுவதுமாக மூடும்படி சுற்றிலும் மண்ணை நிரப்ப வேண்டும். வேர்கள் மண்ணால் மூடப்படும்போதுதான், செடி நிலைகொண்டு, புதிய தளிர்களை நம்பிக்கையுடன் உருவாக்கும். ரோஜா செடிக்கு தண்ணீர் தேவைதான், ஆனால் அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. தொட்டியில் தண்ணீர் தேங்கினால், வேர்கள் மூச்சுத் திணறி அழுகிவிடும். இதைத் தவிர்க்க, தொட்டியின் அடியில் முறையான வடிகால் துளைகள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
அடுத்ததாக, சூரிய ஒளி. செடிக்கு எவ்வளவு சூரிய ஒளி கிடைக்கிறதோ, அந்த அளவிற்கு அதன் வளர்ச்சியும், பூக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். எனவே, உங்கள் வீட்டில் அதிக நேரம் சூரிய ஒளி படும் இடத்தில் ரோஜாத் தொட்டியை வைப்பது சிறந்தது. இந்த எளிய வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் போதும். உங்கள் வீட்டுத் தோட்டத்திலும் வண்ணமயமான ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.