Healthy and Skin care soup: இந்த கொரோனா பேண்டமிக் காலம், சத்தான உணவை உண்ணுவதன் முக்கியத்துவத்தையும், நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்ப்பதைப் பற்றியும் அனைவருக்கும் உணர்த்தியுள்ளது. சத்தான உணவின் கணிசமான பகுதியைக் காய்கறிகள் உருவாக்குகின்றன. உடலின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதிலிருந்து ஆரோக்கியமான வழியில் பசியைத் தீர்ப்பது வரை, காய்கறிகள் எண்ணற்ற வழிகளில் நமக்கு உதவுகின்றன. உங்கள் அன்றாட உணவில் காய்கறிகளைச் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, ஒளிரும் சருமத்தைப் பராமரிக்கவும் உதவும்.
தோல் நோய் மருத்துவர் டாக்டர்.நிகேதா சோனவனே ஓர் சுலபமான காய்கறி சூப் பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாம். இது நோய் எதிர்ப்புச் சக்திக்கு மட்டுமல்ல, ஒளிரும் சருமத்திற்கும் சிறந்தது.
“உங்கள் சருமத்தை UV சேதத்திலிருந்து பாதுகாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் என்னுடைய எளிதான கேரட்-பூசனி சூப் சரியானதாக இருக்கும். கேரட் மற்றும் பூசனிக்காயில் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. இந்த antioxidants உங்களுக்கு ஒளிரும் சருமத்தைக் கொடுக்கும். மேலும், உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்தும்” என்று டாக்டர் நிகேதா கூறுகிறார்.
இந்த எளிய சூப் செய்யத் தேவையான பொருள்கள்:
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தோல் எடுக்கப்பட்டு நசுக்கிய பூண்டு - 4-5 பற்கள்
நறுக்கிய கேரட் - 250 கிராம்
நறுக்கிய பூசனி - 250 கிராம்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
ஃப்ரெஷ் க்ரீம் (அலங்கரிக்க)
மிளகுத்தூள்
செய்முறை
*பிரஷர் குக்கரில் வெண்ணெய்யை சூடாக்கி அதில் பூண்டு சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை மீடியம் தீயில் வதக்கவும்.
*கேரட், பூசணி மற்றும் உப்பு சேர்த்து மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.
*தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். இரண்டு விசில் வந்தபிறகு, அடுப்பை அணைத்து குக்கரைக் குளிர்விக்கவும்.
*வேகவைத்த கலவையை மிக்சி கிரைண்டரில் அடித்துக்கொள்ளவும்.
*சூப் பவுலில் தயாரான சூப்பை மாற்றி, அதன்மேல் க்ரீம் மற்றும் மிளகு தூவி சூடாகப் பரிமாறலாம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"