/indian-express-tamil/media/media_files/2025/05/07/e4gz9H4VztHdtMsgThJM.jpg)
புரதம் நமது உணவின் ஒரு முக்கிய அங்கமாகும். இது தசை உருவாக்கம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், புரதம் உட்பட எதுவுமே அதிகமாக இருந்தால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும். எனவே, உங்கள் புரத இலக்குகளை அடைய முயற்சிக்கும்போது, நீங்கள் அதிகமாக உட்கொண்டால் என்ன நடக்கும் என்று சர் எச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை நிபுணர் மருத்துவர் ஈலின் கேண்டே indianexpress.com-இடம் கூறியுள்ளார்.
"இது இறுதியில் இருதய பிரச்சனைகள், இரத்த நாள கோளாறுகள், கல்லீரல், சிறுநீரகங்களுக்கு பாதிப்பு மற்றும் டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு சிக்கல்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்," என்று அவர் கூறினார். மேலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் அபாயத்தையும், உணவில் அத்தியாவசிய தாதுக்கள் இல்லாவிட்டால் எலும்பு அடர்த்தி குறைவையும் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
"ஆரோக்கியமான நபர்கள் தங்கள் புரத உட்கொள்ளலை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்கத் தேவையில்லை. பொதுவாக விளையாட்டு வீரர்கள், எடை பயிற்சி செய்பவர்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சை அல்லது டயாலிசிஸ் செய்பவர்கள் போன்ற உடல் ரீதியாக சுறுசுறுப்பானவர்களுக்கு ஒரு கிலோ உடல் எடைக்கு 1 கிராமுக்கு மேல் புரதம் தேவைப்படலாம். ஆனால் இது தகுதி வாய்ந்த ஊட்டச்சத்து நிபுணர் அல்லது உணவுமுறை நிபுணரால் பரிந்துரைக்கப்பட வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
2020 இல் வெளியிடப்பட்ட ICMR இன் வழிகாட்டுதல்களின்படி, ஒரு கிலோ உடல் எடைக்கு தோராயமாக 0.8 முதல் 1 கிராம் புரதம் தேவைப்படுகிறது. அதற்கு மேல் எதுவாக இருந்தாலும் அது அதிகப்படியான நுகர்வு என வகைப்படுத்தப்படும்.
கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள் இங்கே:
உடல் அதன் செயல்பாடுகளைப் பராமரிக்க ஒரு தனித்துவமான வழியைக் கொண்டுள்ளது. இதில் ஆபத்தான நிலைக்குச் செல்வதற்கு முன்பு எச்சரிக்கை அறிகுறிகளை வழங்குவதும் அடங்கும். பெங்களூரு ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை சேவைகளின் தலைவர் எட்வினா ராஜ், அதிகப்படியான புரத உட்கொள்ளலைக் குறைக்காவிட்டால் ஏற்படும் ஐந்து முக்கிய அறிகுறிகளைப் பட்டியலிட்டார்:
1. நீரிழப்பு:
அதிக புரத உட்கொள்ளல் புரத வளர்சிதை மாற்றத்தின் துணை பொருட்களை வெளியேற்ற உங்கள் சிறுநீரகங்களை கடினமாக உழைக்கச் செய்யலாம். இது நீரிழப்புக்கு வழிவகுக்கும். நீங்கள் வழக்கத்தை விட அதிக தாகமாக இருப்பதை அல்லது அடர் நிற சிறுநீர் கழிப்பதை கவனிக்கலாம்.
2. செரிமான பிரச்சினைகள்:
புரதம் நிறைந்த உணவை உட்கொள்வது பெரும்பாலும் குறைந்த நார்ச்சத்து உட்கொள்ளலைக் குறிக்கிறது. இது மலச்சிக்கல், வயிறு உப்புசம் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். சரியான அளவு ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் உங்கள் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
3. துர்நாற்றம்:
மிக அதிக புரதம், குறைந்த கார்போஹைட்ரேட் உணவு உங்கள் உடலை கீட்டோசிஸ் நிலைக்கு கொண்டு செல்லக்கூடும்,.இது நல்ல வாய் சுகாதாரத்தைக் கடைப்பிடித்தாலும் கூட வலுவான, விரும்பத்தகாத சுவாச துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
4. எடை அதிகரிப்பு:
புரதம் பெரும்பாலும் எடை இழப்புடன் தொடர்புடையது என்றாலும், அதிகப்படியான புரதம் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும். உடலுக்கு உடனடியாக ஆற்றல் தேவைப்படாவிட்டால், அதிகப்படியான புரதம் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.
5. சிறுநீரக பாதிப்பு:
தொடர்ச்சியாக அதிக புரதம் உட்கொள்வது சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பாக ஏற்கனவே சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்களுக்கு. கைகள், கால்கள் அல்லது முகத்தில் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.